ஆப்கானிஸ்தானை விட்டு அமெரிக்க இராணுவம் வெளியேறினாலும் அந்நாட்டைப் பாதுகாக்க வேண்டிய கடமை எமக்கு உள்ளது என அமெரிக்கத் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார்.
அண்மையில் ஒரு வாரம் அரசமுறைப் பயணமாக சிங்கப்பூர் வந்திருந்த கமலா ஹாரிஸ் இந்தோ பசுபிக் நாடுகளுடன் ஆப்கான் நிலவரம் குறித்த பேச்சுவார்த்தையில் பங்கேற்கிறார்.
ஆசிய சுற்றுப் பயணத்தின் அடுத்த கட்டமாக அவர் வியட்நாமுக்கும் சென்று வெளியுறவுத்துறை அதிகாரிகளை சந்தித்துப் பேசவுள்ளார். இப்பயணங்களின் முக்கிய நோக்காக 20 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானில் குவிக்கப் பட்டிருந்த அமெரிக்கப் படைகள் வாபஸ் பெறப்பட்டது குறித்து ஆசிய நாடுகளுக்குத் தெளிவான விளக்கத்தை அளிப்பது என்பது அமைந்துள்ளது.
இதேவேளை தென் சீனக் கடலில் சீனா தொடர்ந்து அத்துமீறி ஆதிக்கம் செலுத்தி வருகின்றது என செவ்வாய்க்கிழமை ஊடகப் பேட்டியின் போது கமலா ஹாரிஸ் மீண்டும் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.