ஆப்கானிஸ்தானில் தற்போது நிலவும் கடும் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள அந்நாட்டின் மீதான பொருளாதாரத் தடைகளை விலக்கி, அந்நாட்டுக்கான சொத்துக்களையும் விடுவிக்குமாறு அமெரிக்க காங்கிரஸுக்கு புதன்கிழமை தலிபான்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அமெரிக்கா முடக்கியிருக்கும் ஆப்கானுக்கான சொத்துக்கள் காரணமாக பொது மக்கள், சுகாதாரம், கல்வி மற்றும் ஏனைய சேவைக்கான
நிதிப் பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதாக ஆப்கான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஆமீர் கான் முட்டாக்கி தெரிவித்துள்ளார். காபூலில் கடந்த ஒரு வாரத்தில் 3 ஆவது முறையாக வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தப் பட்டிருக்கும் நிலையிலும், அங்கு மில்லியன் கணக்கான மக்கள் வறுமையை எதிர்நோக்கியிருப்பதாக உலக உணவுத் திட்டம் எச்சரிக்கை விடுத்து ஒரு நாள் கழிந்த நிலையிலும் அமீர் கான் முட்டாக்கியில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஆகஸ்ட் மாதம் ஆப்கானிஸ்தான் ஆட்சியை வரலாற்றில் மீண்டும் ஒருமுறை தலிபான்கள் கைப்பற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது. செவ்வாய்க்கிழமை வெளியான உலக உணவுத் திட்டத்தின் அறிக்கையில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது..
'ஆப்கானிஸ்தானில் சுமார் 8.7 மில்லியன் மக்கள் மிகவும் மோசமான பஞ்சத்தின் பிடியில் சிக்கியுள்ளனர். இது தவிர மேலதிகமாக 14.1 மில்லியன் மக்கள் போசாக்கின்மையால் பாதிக்கப் பட்டு வருகின்றனர். மேலும் உள்நாட்டில் இடம் பெயர்ந்திருக்கும் 600 000 பேரும், வறட்சியான இடங்களில் வசிப்பவர்களும் கூட பஞ்சத்தின் பிடியில் சிக்கியுள்ளனர்.