கனடாவில் அண்மைக் காலமாக பெய்து வந்த கடும் மழையால் அந்நாட்டின் மிகப் பெரும் துறை முகம் அமைந்துள்ள பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணம் முழுதும் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இந்த வெள்ளப் பெருக்கில் பல்லாயிரக் கணக்கானவர்கள் சிக்கித் தவிப்பதனாலும் துறைமுகத்தின் செயற்பாடு பாதிக்கப் பட்டிருப்பதாலும் கனேடிய அரசு இம்மாகாணத்தில் அவசர நிலைப் பிரகடனம் செய்துள்ளது.
வெள்ளப் பெருக்கு காரணமாகப் பல இடங்களில் மண்சரிவுகளும் ஏற்பட்டு பல முக்கிய பாதைகள் சேதமாகியுள்ளன. இதுவரை ஒருவர் இறந்ததாக அறிவிக்கப் பட்டாலும், பலர் காணாமற் போயிருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப் படுகின்றது. நவீன உலகைக் கடும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கி வரும் பருவ நிலை மாற்றம் குறித்த COP26 மாநாடு அண்மையில் தான் கிளாஸ்கோவில் நடந்து முடிந்திருந்த நிலையில், இதன் அடுத்த தாக்கத்துக்கு கனடா உள்ளாகியுள்ளது.
பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தின் பல நகரங்கள் முழுமையாகத் தொடர்பு துண்டிக்கப் பட்டுள்ள நிலையில், இதில் சில இடங்களில் உணவுத் தடுப்பாடு ஏற்கனவே ஆரம்பித்து விட்டதாகவும் அறிவிக்கப் பட்டுள்ளது. சில இடங்களில் உணவானது வான் வழியாக விநியோகிக்கப் பட்டாலும் அவை ஒரு நாளைக்கே போதுமானதாக இருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப் பட்ட பிரிட்டிஷ் கொலம்பியாவின் ஆளுனர் ஜோன் ஹோர்கனிடம் பேசிய கனேடிய பிரதமர் ஜஷ்டின் ட்ரூடேயா பாதிக்கப் பட்டவர்களுக்கு மீட்பு நடவடிக்கையையும், நிவாரணத்தையும் வழங்க அரசு விரைந்து செயற்படும் என்றுள்ளார்.
செவ்வாய் இரவு கிழக்கு வான்கூவரின் அப்போட்ஸ்ஃபோர்டு என்ற நகரத்தை சேர்ந்த மக்கள் உடனடியாக பாதுகாப்பான உயர் நிலங்களுக்கு இடம்பெயருமாறு அவசர உத்தரவு பிறப்பிக்கப் பட்டது. துரதிர்ஷ்டவசமாக இப்பகுதி மிகப் பெரிய பால் பண்ணையாக அமைந்திருப்பதால், தமது விலங்குகளையும் வெள்ளத்தில் இருந்து காப்பாற்ற வேண்டிய கடும் அழுத்தம் பொது மக்களுக்கு ஏற்பட்டது.
இது தவிர கனடாவின் மிகப் பெரிய துறைமுகம் அமைந்துள்ள வான்கூவர் பகுதிக்கான கனேடியன் பசிபிக் ரயில் மற்றும் கனேடியன் தேசிய ரயில்வே ஆகிய இரு பெரும் ரயில் நிறுவனங்களது சேவைகளும் வெள்ளத்தால் கால வரையறை இன்றி துண்டிக்கப் பட்டுள்ளதும் அரசுக்குக் கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.