புதன்கிழமை ஆப்கானிஸ்தான் நிலமை குறித்து விவாதிக்க ரஷ்யா சார்பில் சிறப்பு ஆலோசனைக் கூட்டம் மாஸ்கோவில் இடம்பெற்றது.
இதில் தலிபான்களுடன் பேச இந்தியா, அமெரிக்கா உட்பட பல நாடுகளுக்கு ரஷ்யா அழைப்பு விடுத்திருந்தது. ஆனாலும் அமெரிக்கா இதில் கலந்து கொள்ளவில்லை.
இக்கூட்டத்தின் தொடக்கத்தில் ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி பேசிய போது, ஆப்கானில் அமைதி திரும்பி, வளர்ச்சி ஏற்பட வேண்டும் என்பது தான் உலக நாடுகளின் விருப்பம் என்றும், தீவிரவாதிகளின் மையமாக அது மீண்டும் மாறி விடக் கூடாது என்றும், அங்கு அனைவரையும் உள்ளடக்கிய ஒருங்கிணைந்த அரசைத் தலிபான்கள் ஏற்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்தார்.
இக்கூட்டத்தின் இறுதியில் மனிதாபிமான அடிப்படையில் ஆப்கானிஸ்தானுக்குத் தேவையான உதவிகளை வழங்க இந்தியா முன்வந்துள்ளதாகத் தலிபான்கள் உறுதிப் படுத்தியுள்ளனர்.
இன்னுமொரு நடப்பு உலகச் செய்தி -
வங்கதேசத்தில் அண்மையில் மதக் காழ்ப்புணர்ச்சி காரணமாக துர்கா பூஜை நிகழ்வின் போது இந்துக் கோயில்கள் மீது தொடுக்கப் பட்ட வெறித் தாக்குதலில் 4 பேர் கொல்லப் பட்டும் 22 பேர் காயமடைந்தும் இருந்தனர். 66 வீடுகள் சேதப் படுத்தப் பட்டும், 20 இற்கும் மேற்பட்ட வீடுகள் தீக்கிரையாக்கப் பட்டும் உள்ளன. சமூக ஊடகங்களில் மத ரீதியாகத் தவறான தகவல் பரவியதே இந்த வன்முறைக்குக் காரணம் என அறிவிக்கப் பட்டது.
இவ்வன்முறையில் சம்பந்தப் பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப் படும் என வங்க தேசப் பிரதமர் ஷேக் ஹசினா தெரிவித்துள்ளார். மேலும் மதத்தைப் பயன்படுத்தி வன்முறையைத் தூண்டுபவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கவும் அவர் உத்தரவிட்டுள்ளதாகத் தெரிய வருகின்றது.