ரோமில் அண்மையில் நடந்து வந்த G20 நாடுகளின் சர்வதேச மாநாடு, 2050 ஆமாண்டுக்குள் பூச்சிய கார்பன் உமிழ்வு என்ற நிலையை அடைவது என்ற உலகத் தலைவர்களின் ஒருமித்த உறுதிப் பாட்டுடன் முடிவுக்கு வந்துள்ளது.
மேலும் 2021 இறுதிக்குள் வெளிநாட்டு நிலக்கரி அனல் மின் உற்பத்திக்கான நிதியுதவியை நிறுத்துவதற்கான உறுதிமொழியையும் உள்ளடக்கியுள்ளது இந்த மாநாட்டின் இறுதி ஆவணம்.
இது தவிர இம்மாநாட்டின் இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை அன்று புவி வெப்பமடைதல் அதிகரிப்பை 1.5 டிகிரி செல்சியசுக்குள் கட்டுப்படுத்துவதற்கான அழைப்பும் விடுக்கப் பட்டது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவ் நகரில் 2 வாரங்கள் தொடர்ந்து நடைபெறத் திட்டமிடப் பட்டிருக்கும் 200 நாடுகள் பங்கேற்கும் ஐ.நாவின் உத்தியோகபூர்வ பருவநிலை மாநாடு முறைப்படி ஆரம்பமாகியுள்ளது.
இந்த மாநாட்டின் முக்கிய அம்சமே இன்று உலகின் மிகப் பெரும் பிரச்சினையாக மாறியுள்ள புவி வெப்பமயமாதலை எவ்வாறு எதிர்கொள்வது என்பது தொடர்பில் விவாதிப்பதே ஆகும். இனி வரும் பல தசாப்தங்களில் மேற்கொள்ளப் படவுள்ள நடைமுறைகளில் பச்சை வீட்டு விளைவை (Greenhouse gas emissions) ஏற்படுத்தும் வழிகளை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பது அடங்கலாக பல விடயங்கள் பேசப்படவுள்ளன. இம்முயற்சியில் வறிய நாடுகளுக்கு செல்வந்த நாடுகள் எவ்வாறு உதவலாம் என்பதும் உள்ளடங்குகின்றது.
இம்மாநாட்டை பதவி விலகிச் செல்லும் இந்த அமைப்பின் அதிபரான சிலியின் கரோலினா ஷ்மித், ஆரம்பித்து வைத்த போது கோவிட்-19 பெருந்தொற்றில் உயிரிழந்த மக்களுக்கு 1 நிமிட மௌன அஞ்சலியுடன் தொடக்கி வைத்தார். முன்னதாக 2019 ஆமாண்டு இந்தப் பெரும் தொற்று தொடங்க சில நாட்களுக்கு முன்பு தான் முந்தைய ஐ.நா பருவ நிலை மாநாடு இடம்பெற்றதும் குறிப்பிடத்தக்கது.
இதேவேளை இந்த மாநாட்டை கிளாஸ்கோவ் நகர் தலைமை தாங்குவதால் அண்டார்ட்டிக்காவில் உள்ள உருகும் 100 கிலோமீட்டர் நீளமான மிகப் பெரும் பனிப்பாறை (Glacier) ஒன்றிட்கு Glasgow Glacier எனப் பெயரிடப் பட்டுள்ளது. ஐ.நாவின் UNFCCC என்ற பிரிவால் நடத்தப் படும் இம்முறை பருவ நிலை மாநாடு COP26 என அழைக்கப் படுவதும் குறிப்பிடத்தக்கது. முன்னதாகப் பருவ நிலை மாநாட்டைத் தலைமை தாங்கிய நகரங்களான ஜெனிவா, ரியோ, பேர்லின், கியோட்டோ, பாலி, ஸ்டொக்ஹொல்ம், பாரிஸ் மற்றும் இங்கெயோன் ஆகியவற்றின் பெயர்களும் அண்டார்ட்டிக்காவின் பனிப்பாறைகளுக்கு இடப்பட்டுள்ளன.
கடந்த 25 வருடங்களில் புவி வெப்பமடைதல் காரணமாக சுமார் 315 கிகாடன்ஸ் எடை கொண்ட பனியானது கரைந்திருப்பதாகவும், இது 126 மில்லியன் ஒலிம்பிக் அளவு நீச்சல் குளங்களுக்கு சமமான தண்ணீர் என்றும் 2021 ஆமாண்டு ஆய்வு ஒன்று கூறுகின்றது. இதைப் போல் இனிவரும் காலங்களிலும் பனிப்பாறைகள் அதிகளவு உருகினால் கடல் மட்டம் உயர்ந்து கடலோரங்களில் இருக்கும் மிகப் பெரிய மனிதக் குடியேற்றங்கள் உட்பட பல நகரங்களுக்கு அச்சுற்றுத்தல் ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
																						
     
     
    