free website hit counter

மியான்மாரில் நீதிமன்றத்தில் ஆங் சான் சூகி நேரடி ஆஜர்!

உலகம்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

மியான்மாரில் பெப்ரவரி மாதம் இராணுவ ஆட்சிக் கவிழ்ப்பின் பின் வீட்டுக் காவலில் வைக்கப் பட்டிருந்த அந்நாட்டின் அரச தலைவரான ஆங் சான் சூகி 3 மாதங்கள் கழித்து திங்கட்கிழமை முதன்முறையாக நேரடியாக நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப் பட்டுள்ளார்.

மியான்மாரில் அரச சட்டங்களை மீறியதாகவும், பொதுத் தேர்தலில் மோசடி செய்ததாகவும் பல்வேறு குற்றச்சாட்டுக்களின் கீழ் ஆங் சான் சூகி, அதிபர் வின் மைண்ட் உட்பட ஆளும் கட்சியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட தலைவர்களை ஆட்சிக் கவிழ்ப்பின் பின்னர் இராணுவம் வீட்டுக் காவலில் வைத்தது. மேலும் நாடு முழுதும் ஓராண்டுக்கு அவசர நிலையைப் பிரகடனப் படுத்தியதுடன் இராணுவ ஆட்சிக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்த தனது சொந்த நாட்டு மக்களையே இரும்புக் கரம் கொண்டு இராணுவம் அடக்கியது.

போராட்டக் காரர்கள் மீது நிகழ்த்தப் பட்ட துப்பாக்கிச் சூட்டில் 800 இற்கும் அதிகமான பொது மக்கள் கொல்லப் பட்டனர். இந்நிலையில் ஆட்சிக் கவிப்பின் பின் முதன் முறையாக ஆங் சான் சூகி நீதிமன்றத்தில் நேரடியாக ஆஜரானதுடன் தனது வழக்கறிஞர்களையும் 1/2 மணி நேரம் சந்தித்துப் பேசியுள்ளார். அவர் நல்ல உடல் நலத்துடன் இருப்பதாக வழக்கறிஞர்கள் கூறியுள்ளனர்.

இன்னுமொரு நடப்பு உலகச் செய்தி -

கிரீஸ் தலைநகர் ஏதன்ஸில் இருந்து லிதுவேனியன் தலைநகர் வில்னியஸுக்கு பயணித்துக் கொண்டிருந்த ரையன் ஏர் பயணிகள் விமானத்தினை போர் விமானம் ஒன்றின் மூலம் நடுவானில் இடைமறித்து பெலாருஸ் அரசு தனது தலைநகர் மின்ஸ்க் இல் தரையிறக்கியுள்ளது. தனது நாட்டு அரசுக்கு எதிரான விமர்சகரான ரோமன் புரோட்டசெவிஸ் என்பவரைக் கைதுச் செய்யவே பெலாருஸ் அரசு இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

பெலாருஸின் இச்செயலுக்கு சர்வதேச தரப்பில் கடும் விமரிசனமும், இது ஒரு விமானக் கடத்தல் என்ற அவப்பெயரும் ஏற்பட்டுள்ளது. மேலும் புரோட்டசெவிஸ் கைதினை அமெரிக்கா கண்டித்துள்ளதுடன் அவர் உடனடியாக விடுதலை செய்யப் பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction