சுமார் 194 உறுப்பு நாடுகளைக் கொண்ட ஐ.நாவின் உலக் சுகாதார அமைப்பின் 74 ஆவது உலக சுகாதரக் கூட்டத் தொடரான WHA இன்று திங்கட்கிழமை காணொளி வாயிலாக ஆரம்பமானது.
இதில் பிரெஞ்சு அதிபர் எம்மானுவேல் மக்ரோன் உட்பட பல சுகாதார அமைச்சர்களும், உயர் மட்ட பிரந்திநிதிகளும் பங்கேற்று அறிக்கை வெளியிடவுள்ளனர்.
ஜுன் 1 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தொடரில் கோவிட்-19 பெரும் தொற்றுப் பிரச்சினை தவிர இனிமேலும் மனித இனத்தைப் பாதிக்கக் கூடிய கொடிய தொற்று நோய்களை எவ்வாறு எதிர் கொள்வது என்பது தொடர்பிலும் முக்கியமான பேச்சுவார்த்தைகள் இடம்பெறவுள்ளன. உலக நாடுகளுக்கு மிக முக்கியத்துவம் வாய்ந்த இந்தக் கூட்டத் தொடரில் சீன அரசின் அழுத்தம் காரணமாக வழமை போன்றே தாய்வான் அரசு சேர்த்துக் கொள்ளப் படவில்லை.
சுமார் 23.5 மில்லியன் சனத்தொகை கொண்ட சுய ஆளுகை ஜனநாயக அரசான தாய்வான் உலக சுகாதார அமைப்பின் செயல் பாரபட்சமானது எனக் காட்டம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் சீன அரசானது தாய்வானுக்கு அவசரமாகத் தேவைப் படும் கோவிட்-19 தடுப்பு மருந்துகள் மற்றும் மருத்துவ நிபுணர்கள், ஆகியோரை அனுப்பி உதவிக் கரம் நீட்டியுள்ளது. ஆனால் இந்த உதவிக்கு தாய்வான் தரப்பில் கோபமான எதிர்விளைவு ஏற்பட்டதை அடுத்து, கோவிட்-19 விவகாரத்தில் தாய்வான் அரசியலை நுழைக்கின்றது என சீனா கருத்துத் தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
தாய்வானுக்கு இதுவரை கிட்டத்தட்ட 7 இலட்சம் தடுப்பூசி வரையே கிடைத்துள்ளது. இதேவேளை கடந்த ஆண்டே நடக்க வேண்டிய டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டிகள் கோவிட்-19 பெரும் தொற்றால் ஒத்தி வைக்கப் பட்டிருந்தன. இந்நிலையில் இந்த ஆண்டும் ஜப்பானில் கோவிட் நெருக்கடி அதிகரித்து வரும் நிலையிலும் பார்வையாளர்கள் இன்றி திட்டமிட்ட படி போட்டிகள் கட்டுப்பாடுகளின் கீழ் நடைபெறும் என ஜப்பான் அரசு அறிவித்துள்ளது.
இதனை சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் துணைத் தலைவர் ஜான் கோட்ஸ் கடந்த வெள்ளிக்கிழமை உறுதிப் படுத்தினார். ஆனால் ஒலிம்பிக் போட்டிகள் ரத்து செய்யப் பட வேண்டும் அல்லது, இன்னொரு தடவை தள்ளிப் போடப் பட வேண்டும் என்றே ஜப்பானின் பெரும்பாலான மக்களும், சுகாதாரப் பணியாளர்களும் விரும்புவதாக கருத்துக் கணிப்பு வெளியாகியுள்ளது.