ஆப்கானிஸ்தானில் பல தொண்டு நிறுவனங்கள் வெடிக்காத கண்ணி வெடிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றன.
இந்தப் பணி நிமித்தமாக ஹாலோ என்ற தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் வடக்கு பாக்லான் மாகாணத்தில் முகாமிட்டு இருந்தனர். செவ்வாய்க்கிழமை இவர்கள் பணியில் ஈடுபட்ட பின் இரவு ஓய்வெடுத்துக் கொண்டிருந்த போது முகாமுக்குள் துப்பாக்கிகளுடன் நுழைந்த தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 10 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகி உள்ளனர்.
மேலும் இதில் பலர் படுகாயமும் அடைந்தனர். இந்தத் தாக்குதலை தலிபான்களே நடத்தியதாக ஹாலோ தொண்டு நிறுவனம் தெரிவித்த போதும் இதுவரை எந்தத் தீவிரவாத அமைப்பும் இதற்குப் பொறுப்பேற்கவில்லை. இதேவேளை புதன்கிழமை சிரியாவின் ஹோம்ஸ் நகரிலுள்ள ஹிர்பெட் அல் டின் என்ற கிராமத்தில் உள்ள இலக்குகளைக் குறி வைத்து இஸ்ரேல் விமானப் படையினர் நடத்திய அதிரடித் தாக்குதலில் சிரிய இராணுவத்தைச் சேர்ந்த 7 பேர், தேசிய பாதுகாப்புப் படையினர் 4 பேர் என மொத்தம் 11 பேர் உயிரிழந்ததாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
வான் தாக்குதல் நடத்தப் பட்ட பகுதியில் ஹிஸ்புல்லா தீவிரவாத அமைப்பின் தளங்களும் செயற்பட்டு வந்ததாகக் கூறப்படுகின்றது. மறுபுறம் நைஜீரியாவில் இயங்கி வரும் போக்கோ ஹராம் தீவிரவாத அமைப்பின் தலைவர் அபுபக்கர் ஷெகாவு மேற்கு ஆப்பிரிக்க இஸ்லாமிய தேச தீவிரவாத அமைப்புடன் இடம்பெற்ற மோதலில் சரணடைய வலியுறுத்திய போது வெடிகுண்டை வெடிக்கச் செய்து தற்கொலை செய்து கொண்டதாக ISWAB என்ற ஐஎஸ் அமைப்பு தெரிவித்துள்ளது. எனினும் இத்தகவலை போக்கோ ஹராம் அமைப்பு உறுதிப் படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.