இஸ்ரேஸ் - ஹமாஸ் போர் நிறுத்தம் நேற்றுக் காலை நடைமுறைக்கு வந்ததினைத் தொடர்ந்து, மாலையில் கைதிகள் பரிமாற்றமும் நடந்துள்ளது.
கைதிகள் பரிமாற்றத்தின் முதற் தொகுதியில், பெண்கள் மற்றும் குழந்தைகள், உள்ளடங்கிய 13 இஸ்ரேலிய பணயக்கைதிகள், சுமார் 50 நாட்களுக்குப் பிறகு காசாவிலிருந்து விடுவிக்கப்பட்டனர். இவர்களுடன் பதினொரு வெளிநாட்டவர்களும் ஹமாஸால் விடுவிக்கப்பட்டனர். இதற்குப் பதிலாக இஸ்ரேல் 39 பாலஸ்தீனியர்களை விடுவித்தது.
நேற்று காலை 7 மணிக்கு (சுவிட்சர்லாந்தில் காலை 6 மணிக்கு) போர் நிறுத்தம் தொடங்கியது. பிற்பகல் 4 மணியளவில், கைதிகள் பரிமாற்றத்திற்கான நடவடிக்கைகள் தொடங்கின. ஹமாஸ் பிணைக் கைதிகளை சர்வதேச அமைப்பிடம் ஒப்படைத்தது. 9 பெண்கள் (பெரும்பாலும் வயதானவர்கள்), 3 பெண்கள் மற்றும் ஒரு பையன், அனைவரும் போராளிகளின் தாக்குதல்களால் அதிகம் பாதிக்கப்பட்ட Nir Oz kibbutz ஐச் சேர்ந்தவர்கள் எனத் தெரிய வருகிறது.
இஸ்ரேல் வைத்த நிபந்தனையின்படி, கொலைக் குற்றமற்ற 150 பாலஸ்தீனியக் கைதிகளுக்கு ஈடாக 50 பணயக்கைதிகள் விடுவிக்கப்படுவார்கள். இதேவேளை போர்நிறுத்தம் ஏற்கனவே ஒப்புக் கொள்ளப்பட்ட 4 நாட்களுக்கு அப்பாலும் நீடித்தால், 300 பாலஸ்தீனியர்களுக்கு ஈடாக 100 இஸ்ரேலிய கைதிகளை விடுவிக்க வழிவகுக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.