பொதுமக்கள் சுதந்திரமாக ஓய்வு நேரத்தை செலவிடுவதற்காக மாத்திரம் காலிமுகத்திடலை ஒதுக்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
அதன்படி எதிர்வரும் வியாழக்கிழமை (20.04.2023) முதல் நடைமுறைக்கு வரும் வகையில், காலிமுகத்திடலில் சமய நிகழ்வுகள் தவிர்ந்த எந்தவொரு இசை நிகழ்வுகள், அரசியல் கூட்டங்கள் அல்லது பிற ஒன்றுகூடலுக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது என அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
பொது மக்கள் இடையூறின்றி நேரத்தை செலவிடும் இடமாக மாத்திரம் காலிமுகத்திடலை பயன்படுத்துவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
சமூகப் பொறுப்பு செயற்றிட்டமாக காலிமுகத்திடலை அபிவிருத்தி செய்வதற்கு இலங்கை துறைமுக அதிகார சபை பொறுப்பேற்றுள்ளதாகவும் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக 220 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சரவை பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வருடம் முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களின் போது சேதமடைந்த சொத்துகளை புனர்நிர்மாணிப்பதற்காக 6.6 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.
இசை நிகழ்ச்சிகள் மற்றும் பெருந்திரளான மக்கள் ஒன்றுகூடுவதன் காரணமாக காலி முகத்திடல் சேதமடைவதை தடுக்கும் வகையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.