இலங்கை 200 மில்லியன் டொலர்களைக் கடனாகப் பெற்றது.
இலங்கை கடந்த 2021 ஆம் ஆண்டு மேமாதம் பங்களாதேஷிடமிருந்து 200 மில்லியன் டொலர்களைக் கடனாகப் பெற்றது. அதனைக் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் மீளச்செலுத்தவேண்டியிருந்த போதிலும், சுமார் 51 பில்லியன் டொலர் வெளியகக்கடன்களை மீளச்செலுத்தமுடியாத நிலையில் இருப்பதாகக் கடந்த ஆண்டு ஏப்ரலில் இலங்கை அறிவித்தது.
அதனையடுத்து அந்த 200 மில்லியன் டொலர் கடனை இலங்கை மீளச்செலுத்துவதற்கு இவ்வாண்டு மார்ச் மாதம் வரை பங்களாதேஷ் கால அவகாசம் வழங்கியது. இருப்பினும் இன்னமும் கடன் மறுசீரமைப்பு செயன்முறை முழுமையாகப் பூர்த்தியடையவில்லை.
இவ்வாறானதொரு பின்னணியில் 'கடன்களை மீளச்செலுத்துவதற்கு இலங்கை மேலும் 6 மாத காலஅவகாசத்தைக் கோரியிருக்கின்றது. அதன்படி முதற்கட்டமாக எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்திலும், இரண்டாம் கட்டமாக எதிர்வரும் செப்டம்பர் மாதத்திலும் கடன்தொகையை மீளச்செலுத்துவதாக இலங்கை தெரிவித்துள்ளது' என்று பங்களாதேஷ் வங்கியின் ஆளுநர் அப்துர் ரவூப் தாலுக்டர் குறிப்பிட்டுள்ளார்.
அதுமாத்திரமன்றி இதன்பின்னர் மேலும் கால அவகாசம் கோரப்போவதில்லையென இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் உறுதியளித்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை கடன்களை மீளச்செலுத்துவதற்கான கால அவகாசத்தை நீடிக்கும்போது, அது 'இலவசமாக' வழங்கப்படுவதில்லை என்றும் மாறாக அக்காலப்பகுதிக்குரிய வட்டி அறவிடப்படும் என்றும் ஆளுநர் அப்துர் ரவூப் தாலுக்டர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.