தேசியக் கொடியை தேர்தல் பிரச்சாரங்களுக்கு பயன்படுத்துவதன் மூலம் அதற்கு அவமரியாதை செய்ய வேண்டாம் என அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்களிடம் தேர்தல்கள் ஆணையாளர் சமன் ஸ்ரீ ரத்நாயக்க கோரிக்கை விடுத்துள்ளார்.
“தேசியக் கொடி இன்று பெரிய அளவில் அவமதிக்கப்படுகிறது. தேசிய கீதம் கூட இந்த விகிதத்தில் அரசியல் கட்சிகளின் கீதமாக மாறக்கூடும்,” என்றார்.
கிரிக்கெட் போட்டிகளின் போதும் தேசிய கொடியை அவமரியாதை செய்வது காணப்படுகிறது. மக்கள் தங்கள் உடலில் தேசியக் கொடியை சுற்றிக் கொண்டிருப்பதையும், ஒரு கையில் மது பாட்டில்களை வைத்திருப்பதையும் நாங்கள் அடிக்கடி பார்க்கிறோம், ”என்று அவர் மேலும் கூறினார்.
இதேவேளை, தேசியக் கொடி மற்றும் பௌத்த கொடிகள் ஆகிய இரண்டையும் தேர்தல் பிரசாரத்திற்கு பயன்படுத்தக் கூடாது என சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலுக்கான மக்கள் நடவடிக்கையின் (PAFFREL) நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். “தேசிய மற்றும் பௌத்த கொடியை அவமதிப்பது தொடர்பாக பொது நெறிமுறைகள், அரசியலமைப்பு மற்றும் தேர்தல் சட்டம் நடைமுறைக்கு வருகிறது. இதை தடுத்து நிறுத்த வேண்டும்,'' என்றார்.