இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மக்களின் பிரதான பிரச்சனைகளில் முக்கியமான ஒன்று காணி உரிமைப் பிரச்சினை.
இது தொடர்பான பிரச்சனைகளைத் தீர்ப்பது தொடர்பாக நேற்றைய தினம் (23) பாராளுமன்றத்தின் குழு அறை 1ல் நடைபெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்டு உரையாடிய பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய வடக்கு கிழக்கு மக்களின் காணிகளை கையகப்படுத்தும் எண்ணம் அரசுக்கு இல்லை எனத் தெரிவித்தார்.
முன்னைய அரசாங்கங்கள் இப் பிரச்சனை தொடர்பில் மேற்கொண்ட திட்டங்கள் குறித்து பொதுமக்கள் மத்தியில் சந்தேகங்கள் எழுந்துள்ளன. போர், மற்றும் இடப்பெயர்வு காரணமாக காணிக்கான உரிமையை நிரூபிப்பதற்கான ஆவணங்கள் இல்லாத நிலையும் காணப்படுகின்றன. இவ்வாறான நிலையில், மக்கள் நம்பிக்கையை பெறக் கூடிய வேலைத்திட்டம் தேவை என்று, கிழக்கு மாகாணப் பாராளுமன்ற உறுப்பினர்கள் குறிப்பிட்டார்கள்.
கலந்துரையாடலின் பின் பொதுமக்களின் சந்தேகங்களைப் போக்கவும், மோசடிகளைத் தடுக்கவும், முறையான வழிமுறைகளை, சட்டப்பூர்வமாக உறுதிப்படுத்தி காணிகளுக்கான உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என்பதை அரசாங்கம் கவனத்திற்கொள்கிறது. மக்களின் நிலங்களை கையகப்படுத்தும் எண்ணம் அரசாங்கத்திற்கு இல்லை எனப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.