இந்தியாவுக்கும் இஸ்ரேலுக்கும் பரஸ்பர பலனளிக்கக்கூடிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்ய இருதரப்பும் சம்மதம் தெரிவித்துள்ளன.
இஸ்ரேலுக்குப் புதன்கிழமை (பிப். 25) சென்றிறங்கிய பிரதமா் மோடிக்கு அந்நாட்டில் உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது. அதன்பின், அங்கு பிரதமர் மோடிக்கும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கும் இடையேயான பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, இரு தரப்புக்குமிடையே வர்த்தகம், விவசாயம், ஆற்றல், இணையவழி, மின்னணு துறைகள் ஆகியவற்றில் ஒப்பந்தங்கள் கையொப்பமாகியுள்ளன.
இந்தப் பேச்சுவார்த்தையில், இந்தியாவுக்கும் இஸ்ரேலுக்குமிடையே ஏற்கெனவே வலுவாக உள்ள பாதுகாப்பு பங்களிப்பில் விரிவாக்கம் செய்திட இரு தரப்பும் உறுதி பூண்டுள்ளன. அந்த வகையில், பரஸ்பர தொழில்நுட்ப பகிர்வின்கீழ், ராணுவ உபகரணங்களின் கூட்டுத் தயாரிப்புக்கும் பாதுகாப்பு மேம்பாட்டுக்கும் விரிவாக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள சம்மதம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமது இஸ்ரேல் பயணத்தின் வெளிப்பாடாக “இந்தியாவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையேயான நிரூபிக்கப்பட்ட பங்களிப்பை உயர்த்திட ‘சிறப்பு மூலோபய பங்களிப்பு’ என்னும் வரலாற்று முடிவொன்றை நாங்கள் எடுத்துள்ளோம்” என்று பிரதமர் மோடி தமது எக்ஸ் தளப் பக்கத்தில் இஸ்ரேலின் ‘ஹெப்ரூ’ மொழியில் பதிவிட்டு மகிழ்ச்சியை மக்களுடன் பகிர்ந்துள்ளார்.
மேலும், இந்தியா - இஸ்ரேல் இடையே முக்கிய மற்றும் வளரும் தொழில்நுட்பங்களுக்கான பங்களிப்பு உருவாக்கப்படுமென குறிப்பிட்டுள்ள பிரதமர் மோடி, இதன்மூலம், செயற்கை நுண்ணறிவு, குவாண்டம், முக்கிய தாதுக்கள் ஆகிய துறைகளில் இந்தியாவும் இஸ்ரேலும் ஒத்துழைப்பு நல்கிட புத்துணர்ச்சி ஏற்படுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியப் பிரதமரின் இஸ்ரேல் பயணத்தில் ‘இந்தியா - மத்திய கிழக்கு ஐரோப்பா பொருளாதார வழித்தடம் (ஐஎம்இசி)’ அமல்படுத்திட இந்தியாவும் இஸ்ரேலும் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
பொருளாதாரத்தின் பல்வேறு பிரிவுகளிலும் மூலோபய துறைகளிலும் கூடுதல் ஒத்துழைப்பும் கூட்டுப் பங்களிப்பையும் நல்குவதை முக்கியமாகக்கொண்டு முன்மொழியப்பட்டுள்ள தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தையின் வெளிப்பாடானது, வெறுமனே இருதரப்புக்கிடையேயான வரி தளர்வு நடவடிக்கையாக மட்டுமில்லாமல், முக்கியத்துவம் வாய்ந்த துறைகளில் இருதரப்பு பொருளாதாரமும் எந்தளவுக்கு சந்தையை விரிவுபடுத்திட பங்களிப்பை வழங்கிடும் என்பதும் கொள்கை வகுப்பாளர்களுக்குச் சவாலாக அமையுமென்று இத்துறை சார் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
