free website hit counter

இலங்கை: தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி

விளையாட்டு
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

மூன்று தொடர்களை கொண்ட ஒரு நாள் போட்டியில் இலங்கை அணி இறுதி போட்டியில் 3 விக்கெட்டுக்களால் இந்திய அணியினை வெற்றி கொண்டது.

இலங்கை ரசிகர்களுக்கு ஆறுதலளிக்கும் வகையில் புதிய வீரர்களை கொண்ட இலங்கை அணி வெற்றியை பதிவு செய்துள்ளது.

2017 ஆம் ஆண்டிற்கு பின் இந்திய அணியினை  இலங்கை அணி வென்றுள்ளது. ஆனாலும் தொடரை 2-1 எனும் கணக்கில் இந்திய அணி கைப்பற்றியுள்ளது. ஐ.சி.சி ஆடவருக்கான உலகக்கோப்பை சுப்பர் லீக் சுற்றின் தரவரிசைப்பட்டியலில் இந்தியா நான்காவது இடத்திலும் இலங்கை பதினொறாவது இடத்திலும் இருக்கின்றது. இந்த தரவரிசைப்பட்டியலில் முதல் ஏழு இடங்களை பிடிக்கும் அணியே 2023 ஐ.சி.சி உலகக்கோப்பையில் விளையாட தகுதியடையும். ஆகவே இனி வரும் போட்டிகளில் இலங்கை அணி வெற்றிப்பெறுவதற்கான உத்திகளை கையாள வேண்டியுள்ளது.

நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இந்திய அணியின் தலைவர் சிக்கர் தவான் முதலில் துடுப்பெடுத்தாட முடிவு செய்தார். ஆரம்ப துடுப்பாட்டக்காரர் பிரித்வி சாவ் தனது பாணியிலான அதிரடி ஆட்டத்தை ஆடாமல், தனது கன்னி அரைச்சதத்தை பெறுவதற்காக சற்று நிதானமாக ஆடினார். எனினும் துரதிஷ்டவசமாக 49 பந்துகளுக்கு 49 ஓட்டங்களை எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். சஞ்சு சாம்சன் 46 ஓட்டங்களையும், சூர்யகுமார் யாதேவ் 40 ஓட்டங்களையும் இந்திய அணி சார்பாக எடுத்தனர். இலங்கை அணி சார்பாக அகில தனன்ஜய மற்றும் பிரவின் ஜயவிக்ரம தலா மூன்று விக்கெட்களையும், துஷ்மன்த சமீர இரண்டு விக்கெட்களையும் எடுத்தனர். இந்திய அணி 43.1 ஓவர்கள் முடிவில் தனது அனைத்து விக்கெட்களையும் இழந்து 225 ஓட்டங்களை பெற்றது.

 

இந்திய அணியின் துடுப்பாட்டத்தின் இடையே மழையின் குறுக்கீடு காரணமாக 47 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டது. ஆகவே டக்வெத் லூயிஸ் முறையில் 227 ஓட்டங்களை வெற்றி இலக்காக இலங்கை அணிக்கு நிர்ணயம் செய்யப்பட்டது.

இலங்கை அணி சார்பாக அவிஸ்க பெனான்டோ 76 ஓட்டங்களையும், பானுக ராஜபக்ச 65 ஓட்டங்களையும் எடுத்தனர். இவ்விருவரும் இரண்டாம் விக்கெட்டுக்காக 109 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றனர். இந்திய அணி வீரர்கள் ஆரம்பம் முதலே சில பந்துகளை பிடியெடுக்க தவற விட்டனர். எனினும் இலங்கை அணிக்கு வெற்றி மிகவும் சமீபத்தில் இருக்கும் போது இந்திய அணியின் பந்து வீச்சாளர்களின் சிறப்பான பந்துவீச்சால் விக்கெட்கள் வீழ்த்தப்பட்டது. எவ்வாறாயினும் இலங்கை அணி 39 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்களை இழந்து 227 ஓட்டங்களை எடுத்து வெற்றிப்பெற்றது. இந்திய அணி சார்பாக ராகுல் சஹர் மூன்று விக்கெட்களையும், சிடன் சகரியா இரண்டு விக்கெட்களையும், கிரிஸ்னப்பா கெளதம் மற்றும் ஹர்திக் பாண்டியா தலா ஒரு விக்கெட்டையும் எடுத்தனர்.

போட்டியின் ஆட்டநாயகனாக அவிஸ்க பெனான்டோவும் தொடரின் சிறப்பாட்டக்காரராக சூர்யகுமார் யாதேவ் தெரிவு செய்யப்பட்டனர்.

எனினும் இலங்கை இந்திய அணிகளுக்கிடையிலான தொடரில் இரு அணியிலும் புதிய அறிமுக வீரர்கள் சிறப்பாக விளையாடியுள்ளனர். இதில் சிலர் தேசிய அணியில் தொடர்ச்சியாக விளையாடுவதற்கான சாத்தியப்பாடுகள் அதிகம் காணப்படுகிறது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction