புதுடெல்லி: இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவையில், எதிர்க்கட்சிகளில் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில், வக்பு திருத்த மசோதா நள்ளிரவில் நிறைவேறியது. ஆதரவாக 288, எதிராக 232 பேர் வாக்களித்தனர்.
இந்தியாவில், இஸ்லாமிய மதத்தில் இறை பணிகளுக்காக அளிக்கப்படும் அசையும் மற்றும் அசையாத சொத்துகள், நன்கொடைகளை நிர்வாகம் செய்வதற்கு, 1954 ஆம் ஆண்டு வக்ஃபு வாரிய சட்டம் கொண்டு வரப்பட்டது. இதை ஒழுங்குபடுத்த 1995 மற்றும் 2013 ஆம் ஆண்டுகளில் வஃக்பு சட்டத்தில், சில திருத்தங்கள் செய்யப்பட்டன.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாரதிய ஜனதா அரசு பதவியேற்ற பிறகு, வக்ஃபு வாரிய சட்டத்தில் மேலும் சில திருத்தங்களை கொண்டுவர முடிவு செய்யப்பட்டது. அதன்படி, இந்திய நாடாளுமன்ற மக்களவையில் இதற்கான மசோதா, கடந்தாண்டு ஆகஸ்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது.
எனினும், எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்ததால், நாடாளுமன்ற கூட்டுக் குழு ஆய்வுக்கு, வக்பு திருத்த மசோதா அனுப்பப்பட்டது. கூட்டுக்குழு சார்பில் பலமுறை ஆலோசனை கூட்டங்கள் நடைபெற்று, ஒவ்வொரு பரிந்துரை தொடர்பாகவும் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. பெரும்பான்மை உறுப்பினர்கள் பரிந்துரை செய்த மாற்றங்கள் ஏற்கப்பட்டன. கடந்த ஜனவரியில் சபாநாயகர் ஓம் பிர்லாவிடம், வக்ஃபு வாரிய சட்டத்தில் 44 திருத்தங்கள் செய்யப்பட்ட 655 பக்க அறிக்கையை, கூட்டுக்குழு வழங்கியது.
இந்த நிலையில், வக்பு சட்ட திருத்த மசோதா இந்திய நாடாளுமன்ற மக்களவையில் புதன் கிழமை(ஏப்.2) தாக்கல் செய்யப்பட்டது. சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு மக்களவையில் மசோதாவை தாக்கல் செய்தபோது, எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில், மக்களவையில் இந்த மசோதா மீதான விவாதம், அனல்பற்ற நடைபெற்றது. சுமார் 12 மணி நேரத்திற்கு மேலாக நீடித்த விவாதம் நள்ளிரவு 12 மணியளவில் நிறைவுபெற்றது. அதன் பின் வாக்கெடுப்புக்கான நடைமுறைகள் தொடங்கின.
இந்த வாக்கெடுப்பில் மசோதா நிறைவேறியதாக நள்ளிரவு 2 மணியளவில் அறிவிப்பு வெளியானது. மசோதாவுக்கு ஆதரவாக 288 வாக்குகளும், எதிராக 232 வாக்குகளும் கிடைத்தன. மக்களவையில் நிறைவேறிய நிலையில், இந்திய நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் வக்பு சட்ட திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளது.
முன்னதாக, மசோதா மீதான விவாதத்தில் பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, “வக்பு சட்டத்தின்படி, கோயில்கள், பிற மதத்தினர், அரசுகள் ஆகியோருக்கு சொந்தமான நிலங்கள் வக்பு சொத்துகளாக அறிவிக்கப்பட்டு உள்ளன. தமிழ்நாட்டில் உள்ள 400 ஆண்டுகள் பழமையான கோயிலுக்கு சொந்தமான சொத்தும் வக்பு சொத்து என அறிவிக்கப்பட்டது. இவற்றுக்கெல்லாம் முடிவு கட்டுவதற்குதான் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
முஸ்லிம் அல்லாத வக்பு வாரிய உறுப்பினர்கள் மத விவகாரங்களில் தலையிட மாட்டார்கள். வக்பு வாரியத்தின் நிர்வாகம் மற்றும் நன்கொடை நிதி சார்ந்த விஷயத்தில் நிர்வாக ரீதியாக அவர்கள் பணிபுரிவார்கள். ஓய்வுபெற்ற சிஏஜி அதிகாரிகள் கணக்கு விவகாரங்களை கவனிப்பார்கள்" என்று தெரிவித்தார்.