சென்னை: இலங்கைக்கு வழங்கப்பட்ட கச்சத்தீவை இந்திய அரசு இந்தியா மீட்க வேண்டும் என்று, தமிழ்நாடு சட்டசபையில் புதனன்று ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழ்நாடு மீனவர்கள் ராமேஸ்வரம் அருகே மீன்பிடிக்கும்போது எல்லை தாண்டி வருவதாகக் கூறி, அவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்கின்றனர். தமிழக மீனவர்கள் கைது விவகாரம், இரு நாடுகளுக்கும் இடையே பெரும் தலைவலியாக நீடித்து வருகிறது.
இந்த பிரச்சினைக்கு நிரந்தரமாக ஒரு தீர்வை எட்ட, இலங்கையுடன் இந்தியா பேச வேண்டும் என்று தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. அதேபோல், இலங்கைக்கு தாரைவார்க்கப்பட்ட கச்சத்தீவை மீட்க வேண்டும் எனவும் தமிழகத்தில் இருந்து கோரிக்கைகள் எழுந்து வருகின்றன.
இந்த நிலையில், கச்சத்தீவை இலங்கையிடம் இருந்து மீண்டும் திரும்ப பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசின் தனித் தீர்மானத்தை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு சட்டப்பேரவையில் கொண்டு வந்தார்.
அப்போது பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்“இலங்கையில் ஆட்சி மாறினாலும் தமிழக மீனவர்களின் நிலை மாறவில்லை. கச்சத்தீவை மாநில அரசுதான் தாரை வார்த்ததாக திமுகவிற்கு எதிராக அரசியல் செய்யப்படுகிறது. கச்சத்தீவு ஒப்பந்தம் கையெழுத்தானவுடன் அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி கடுமையாக எதிர்த்தார்.
கச்சத்தீவு ஒப்பந்தத்தில் திருத்தம் தேவை என தமிழக சட்டசபையில் முன்னாள் முதலமைச்சர்கள் ஜெயலலிதா, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தீர்மானம் நிறைவேற்றினர். மீனவர்கள் விவகாரத்தில் பாஜக அரசு இதுவரை ஆக்கப்பூர்வ நடவடிக்கை எடுக்கவில்லை.
தமிழ்நாடு மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளை நிலைநாட்டவும், இலங்கை கடற்படையால் தமிழ்நாட்டு மீனவர்களுக்கு ஏற்படும் அனைத்து இன்னல்களை போக்கிடவும் கச்சத்தீவை மீண்டும் பெறுவதே நிரந்தர தீர்வாக அமையும். இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்து, கச்சத்தீவைத் திரும்பப் பெறுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும்" என்று பேசினார்.
இந்த தீர்மானத்துக்கு அதிமுக, பாஜக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் ஆதரவு அளித்தன. இதையடுத்து குரல் வாக்கெடுப்பு மூலமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த அரசினர் தனித் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.