free website hit counter

இன்று கடைசி நாள்: பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் ரூ.1,000 வரை அபராதம்

இந்தியா
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
பான் எண்ணுடன் ஆதார் எண் இணைக்க இன்று கடைசி நாள். இரண்டையும் இணைக்காவிட்டால் ரூ.1,000 வரை அபராதம் விதிக்கப்படும் என்று வருமான வரித்துறை கூறியுள்ளது.
வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்காக வருமான வரித்துறையால் நிரந்தர கணக்கு எண் (பான்) வழங்கப்படுகிறது. அதனுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று வருமான வரித்துறை வலியுறுத்தி வருகிறது.

இதற்கான காலக்கெடுவை அவ்வப்போது நீட்டித்து வந்தது. இதற்கிடையே, கடைசியாக நிர்ணயிக்கப்பட்ட காலஅவகாசம் இன்று (வியாழக்கிழமை) முடிவடைகிறது.

இதுகுறித்து வருமான வரித்துறையின் உயரிய அமைப்பான மத்திய நேரடி வரிகள் வாரியம் நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டது.

அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க மார்ச் 31 திகதி (இன்று) கடைசி நாள். அதற்குள் இணைக்காவிட்டால் பான் எண் செயலிழந்து விடும்.

அத்துடன் 31ஆம் திகதிக்கு பிறகு அபராதம் செலுத்தித்தான் ஆதார் எண்ணை இணைக்க வேண்டி இருக்கும். ஏப்ரல் 1ஆம் திகதியில் இருந்து ஜூன் 30ஆம் திகதிக்குள் இணைப்பதற்கு ரூ.500 அபராதமாக செலுத்த வேண்டும்.

அதன்பிறகு இணைப்பதற்கு ரூ.1,000 அபராதம் செலுத்த வேண்டும். அபராதம் செலுத்தினால்தான், பான் எண் மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

வங்கி கணக்கு தொடங்குதல், ரூ.50 ஆயிரத்துக்கு மேல் வங்கி கணக்கில் பணம் செலுத்துதல், அசையா சொத்துகள் வாங்குதல், பரஸ்பர நிதி பரிமாற்றம் போன்றவற்றுக்கு பான் எண் குறிப்பிடுவது கட்டாயம் ஆகும்.

எனவே, பான் எண் செயலிழந்து விட்டால், மேற்கண்ட பரிமாற்றங்களை செய்ய முடியாமல் போய்விடும்.

எனவே, வரி செலுத்துவோர் தங்களது பான் எண்ணுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ளதா என்பதை வருமானவரி இணையதளத்தில் சரிபார்த்துக்கொள்ள வேண்டும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula