தலைநகர் டெல்லி சென்றுள்ள தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று பகல் பாரதப் பிரதமர் மோடி அவர்களை நேரில் சந்தித்துப் பேசினார்.
டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள பிரதமர் அலுவலக அறையில் நடைபெற்ற இந்தச் சந்திப்பின் போது, தமிழக நலத் திட்டங்களுக்கு தர வேண்டிய நிதி நிலுவை தொகையை உடனடியாக தர வேண்டும் என்றும், மழை வெள்ளம் மற்றும் மாநில அரசின் திட்டங்களுக்கான நிதியையும் தாமதம் இல்லாமல் தர வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.
மேலும் தமிழகத்தில் டெல்டா விவசாயத்தை பாதிக்கும் வகையில் கர்நாடக அரசின் மேகதாது அணை, கச்சத்தீவு அருகே மீன் பிடிக்க செல்லும் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் சிறைப்பிடித்து செல்வது என்பவற்றுக்கான நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும் என்பதையும் பிரதமரின் கவனத்துக்குக் கொண்டு வந்தார்.
இந்த சந்திப்பின் போது, டெல்லி தி.மு.க. அலுவலக திறப்பு விழாவுக்கு வருமாறு பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்து, அதற்கான அழைப்பிதழையும் வழங்கினார்.