கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் தடுப்பூசி பற்றாக்குறையாலும் ஒன்றிய அரசின் பாரபட்சத்தாலும் பாஜக ஆட்சி இல்லாத மாநிலங்கள் அல்லாடி வருகின்றன. இதை உறுதி செய்கிறது மத்திய அயுர்வேத அமைச்சகமான ஆயுஷ் அமைச்சகத்தின் அணுகுமுறை.
ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே கொரோனாவுக்கு அனந்தய்யா என்பவர் விற்பனை செய்த ஆயுர்வேத லேகிய மருந்தை வாங்கிச் சாப்பிட 50 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் குவிந்தனர். கொரோனாவல் பாதிக்கப்பட்டு வீட்டுத் தனிமையில் இருந்தவர்களும் தனி வரிசையில் வந்து 24 மணி நேரம் வரை காத்திருந்து அந்த லேகிய மருந்தை வாங்கிச் சாப்பிட்டுச் சென்றனர். அந்த மருந்துக்கு ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான அம்மாநில அரசு அனுமதி அளித்துள்ளது.
இதுவொருபுறம் இருக்க, இந்த லேகிய மருந்தை தாமாகவே முன்வந்து ஆய்வு செய்த ஒன்றிய அரசின் ஆயுஷ் அமைச்சகக் குழு ஒன்று, இந்த லேகியம் கரோனா தொற்றை குணப்படுத்துகிறதா என ஆய்வு செய்து அறிக்கை அளித்தது. அந்த அறிக்கையின் அடிப்படையில் 2 நாட்களில் ஆந்திர லேகியத்திற்கு ஆயுஷ் அமைச்சகம் அவசர கால அடிப்படையில் அனுமதி வழங்கியது.
இது இவ்வாறு இருக்க, கொரோனா முதல் அலை தமிழகத்தை தாக்கியபோது நிலவேம்புக் குடிநீர், கபசுரக் குடிநீர் ஆகிய கஷாயங்கள் அதிக நோயாளிகளை குணப்படுத்தின. தமிழக அலோபதி மருத்துவர்களே இவற்றை பரிந்துரை செய்தனர். அலோபதி மருந்துடன் இவை கூட்டு சிகிச்சையாகவும் வழங்கப்பட்டன. இப்படிப்பட்ட சூழிநிலையில்தான், மதுரையைச் சேர்ந்த அரசு சித்த மருத்துவர் எஸ்.சுப்பிரமணியன் என்பவர் கொரோனாவை குணப்படுத்தும் இம்ப்ரோ சித்த மருத்து பொடி ஒன்றை தயார் செய்தார். அதில் 66 மூலிகைகள் அடங்கியுள்ளது. இம்ப்ரோ எனவும் பெயரிட்டார்.
இந்த மருந்தை நுண்ணுயிர் ஆய்வுக்கு உட்படுத்த அனுமதி வழங்கக் கோரி உயர் நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், இம்ப்ரோ மருத்துவ பொடியை ஆய்வுசெய்து அறிக்கை அளிக்க தமிழக மருத்துவக் குழுவுக்கு உத்தரவிட்டது. தமிழக மருத்துவக் குழுவும் ஆய்வு செய்து, இம்ப்ரோ பொடியில் கரோனா கிருமியை கொல்லும் சக்தி இருப்பதாக உயர் நீதிமன்றத்தில் அறிக்கை அளித்தது. இதையடுத்து உயர் நீதிமன்ற அமர்வு, மத்திய ஆயுஷ் அமைச்சகத்தில் சித்த மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் இம்ப்ரோ பொடியை ஆய்வு செய்து அனுமதி வழங்க உத்தரவிட்டது.
மத்திய ஆயுஷ் அமைச்சகம் கேட்ட அனைத்து ஆவணங்களையும் சுப்பிரமணியன் வழங்கியுள்ளார். இருப்பினும் கடந்த ஓராண்டாக அனுமதி கிடைக்கவில்லை. ஆனந்தய்யாவின் ஆயுர்வேத லேகியத்துக்கு இரண்டே நாளில் அனுமதி வழங்கியதுபோல், இம்ப்ரோ பொடிக்கும் உடனடியாக அனுமதி வழங்க வேண்டும் என நெட்டிசன்கள் மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் ட்விட்டர் கணக்கையும் பிரதமர் மோடி ட்விட்டர் கணக்கையும் நூற்றுக் கணக்கானோர் டேக் செய்துள்ளனர். ஆனால், அவற்றுக்கு எந்த பதிலும் இல்லை.
-4தமிழ்மீடியாவுக்காக: மாதுமை