சென்னை: தமிழ்நாடு ஆளுநரின் செயல்பாடு நேர்மையானதாக இல்லை; 2-வது முறையாக நிறைவேற்றப்பட்ட 10 மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு அனுப்பியது சட்டவிரோதம் என்று, இந்திய உச்சநீதிமன்றம் பரபரப்பான தீர்ப்பை அளித்துள்ளது.
அரசு சார்பில் அனுப்பப்பட்டுள்ள மசோதாக்களை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி கிடப்பில் வைத்திருப்பதாகக் கூறி, அவருக்கு எதிராகவும், கிடப்பில் வைத்திருக்கும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க ஆளுநருக்கு உடனே உத்தரவிடக் கோரியும் இந்திய உச்சநீதிமன்றத்தில் கடந்த 2023ம் ஆண்டு தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது.
இது தொடர்பாக தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மனுவில், இந்திய அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 200ன்படி ஆளுநர் நடவடிக்கை எடுக்க என்ன வாய்ப்பு உள்ளது என்பதை ஆராய வேண்டும். மாநில அரசின் அறிவுரைப்படி மட்டும்தான் ஆளுநர் செயல்பட முடியுமா அல்லது சுயேச்சையாக முடிவுசெய்ய அதிகாரம் உள்ளதா என்பதை முடிவு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
இந்த வழக்கில் செவ்வாய் கிழமையன்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜெ.பி.பர்திவாலா, ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பு வழங்கியது. தீர்ப்பில் நீதிபதிகள் கூறியதாவது:
மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டால் அரசியலமைப்பு சட்டப்பிரிவு 200ன் படியே ஆளுநர் செயல்பட வேண்டும். வெறுமனே மசோதாவை நிறுத்தி வைப்பதாக ஆளுநர் கூற முடியாது. சட்டப்பேரவையில் 2-வது முறையாக நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பி வைக்க முடியாது.
ஆளுநர் ஒருமுறை மசோதாவை நிறுத்தி வைத்துவிட்டால் அதன் தொடர் நடவடிக்கையை அவர்தான் மேற்கொள்ள வேண்டும். 10 மசோதாக்களை தமிழ்நாடு ஆளுநர் நிறுத்தி வைத்தது சட்டவிரோதம். அவற்றை ஆளுநர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்தது சட்டவிரோதம். குடியரசுத் தலைவருக்கு 10 மசோதாக்களை அனுப்பி வைத்த ஆளுநரின் நடவடிக்கை ரத்து செய்யப்படுகிறது.
குடியரசுத் தலைவருக்கு 10 மசோதாக்களை ஆளுநர் அனுப்பி வைத்தது செல்லாது. ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயல்பாடு நேர்மையானதாக இல்லை. அவர் 2வது முறையாக நிறைவேற்றி அனுப்பிய 10 மசோதாக்களுக்கு அன்றே ஒப்புதல் அளித்திருக்க வேண்டும். வழக்கி, மசோதாக்களுக்கு ஒப்புதல் தர ஆளுநருக்கு ஒருமாதம் காலக்கெடு தரப்படுகிறது. சில பிரிவுகளில் ஒரு மாதத்திலும் சில பிரிவுகளில் 3 மாதத்துக்குள்ளும் மசோதாக்கள் மீது ஆளுநர் முடிவு எடுக்க வேண்டும். இவ்வாறு தீர்ப்பு வழங்கினர்.
உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை வரவேற்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசினார். வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை தமிழ்நாடு அரசு பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.