பீகார் இளைஞர்கள் வேலை தேடி வெளியே செல்லக்கூடாது ; சொந்த மாநிலத்திலேயே வேலைவாய்ப்பைப் பெற வேண்டும் என்று தெரிவித்துள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, பெகுசராய் நகரில் காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற பேரணியிலும் பங்கேற்றார்.
இந்தியாவின் பீகார் மாநிலத்தில், பாரதிய ஜனதா கட்சி ஆதரவு பெற்ற ஐக்கிய ஜனதாதளம் கட்சி அரசு பதவியில் உள்ளது. முதல்வராக நிதிஷ்குமார் பதவியில் உள்ளார். இந்த மாநிலத்தில் ஆண்டின் இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த சூழலில், மாநிலத்தின் பிரதான எதிர்க்கட்சியாக காங்கிரஸ் கட்சி உள்ள நிலையில், மாநில அரசுக்கு எதிராக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறது.
அந்த வகையில், பீகார் தலைநகரான பாட்னாவில் ராகுல் காந்தி எம்.பி. பங்கேற்ற வெள்ளை சட்டை பேரணியை காங்கிரஸ் கட்சி நடத்தியது. பாட்னா அருகே வெகுசராய் பகுதியில் நடந்த பேரணியில், வெள்ளை சட்டை அணிந்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்று பாதை யாத்திரையாக நடந்து சென்றார்.
பேரணியில் ராகுல் காந்தி பேசுகையில், "பீகார் இளைஞர்கள் இடம்பெயரக் கூடாது, அவர்கள் தங்கள் சொந்த மாநிலத்தில் வேலைவாய்ப்பு பெற வேண்டும். இதுதான் எங்கள் பயணத்தின் நோக்கம். இந்தப் பயணம், பீகாரின் குரலாகவும் நம்பிக்கையாகவும் இருக்கிறது. பல ஆண்டுகளாக அநீதியை சந்தித்து வரும் மாநில இளைஞர்களுக்கு 'நீதிக்கான உரிமையை' தொடர்ந்து வழங்குவோம்" என்றார்.
பீகார் சட்டப்பேரவை தேர்தலை குறிவைத்து அந்த மாநிலத்தில் அரசியல் நடவடிக்கையை ராகுல் காந்தி தீவிர படுத்தியுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.