free website hit counter

தமிழகத்தின் அலங்கார ஊர்திக்கு அனுமதி இல்லை - மத்திய அரசு!

இந்தியா
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

குடியரசு தின விழா கொண்டாட்டங்கள் டெல்லியில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26ஆம் திகதி கோலாகலமாக கொண்டாடப்படும்.

ஆனால், கொரோனா காரணமாக கடந்த ஆண்டு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் கொண்டாடப்பட்டன. இந்த ஆண்டும் கொரோனா ஒமைக்ரான் பரவலால் கட்டுப்பாடுகளுடனேயே நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

குடியரசு தினத்தன்று டெல்லி ராஜபாதையில் நடைபெறும் விழாவில், பல்வேறு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் கலாச்சாரங்களை குறிக்கும் மாதிரிகள் இடம்பெற்ற ஊர்திகள் அணிவகுப்பு நடைபெறும். இந்த ஆண்டு தமிழ்நாட்டின் சார்பில், நாட்டின் விடுதலைக்காகப் போராடிய வ.உ.சி., மகாகவி பாரதியார், ராணி வேலுநாச்சியார், மருது சகோதரர்கள் ஆகிய விடுதலைப் போராட்ட வீரர்களின் உருவங்கள் அடங்கிய ஊர்தி இடம்பெறுவதாக இருந்தது.

ஆனால், அதற்கு மத்திய அரசு அனுமதி மறுத்துள்ளது. “பிரபலமான சுதந்திர போராட்ட வீரர்கள்” இடம் பெற்றால்தான் அனுமதிப்போம், வ.உ.சி, வேலுநாச்சியார் போன்ற சுதந்திரபோராட்ட வீரர்களை சர்வதேச தலைவர்களுக்கு தெரியாது என கூறி மத்திய அரசு நிராகரித்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மேலும், டெல்லியில் நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பில், கொரோனா பெருந்தொற்று உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பங்கேற்கும் மாநிலங்களின் எண்ணிக்கை 12 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

தமிழகம் மட்டுமல்லாமல் மேற்குவங்கம், கேரளா ஆகிய மாநிலங்களின் ஊர்திகளுக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதற்கு கடும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன. இது தொடர்பாக மத்திய அரசுகு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில், தமிழக அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது ஏமாற்றம் அளிக்கிறது. பிரதமர் மோடி இதில் உடனே தலையிட்டு விடுதலைப் போராட்ட வரலாற்றில் தமிழ்நாட்டின் பங்களிப்பு இடம்பெறுவதை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

இந்த நிலையில், தமிழகத்தின் அலங்கார ஊர்தி இடம்பெறச் செய்வது குறித்து மறுபரிசீலனை செய்ய முடியாது என மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. டெல்லி குடியரசு தின அலங்கார ஊர்தி அணிவகுப்பில் தமிழகம் இடம்பெறாதது குறித்து மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அளித்துள்ள விளக்கத்தில், “அலங்கார ஊர்திகளை தேர்வு செய்வதற்கான ஏற்கனவே வகுக்கப்பட்ட நடைமுறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. பல்வேறு மாநிலங்கள், மத்திய அமைச்சகங்களிடம் இருந்து பெறப்பட்ட பரிந்துரைகள் கலை, கலாசாரம், சிற்பம், இசை, கட்டிடக்கலை, நடனம் போன்ற துறைகளை சேர்ந்த நிபுணர் குழுவின் கூட்டங்களில் மதிப்பீடு செய்யப்படுகின்றன.பரிந்துரைகள் செய்யப்படுவதற்கு முன்னர் அலங்கார ஊர்திகளின் கருப்பொருள், கருத்து, வடிவமைப்பு, காட்சி அமைப்பின் தாக்கம் ஆகியவை ஆய்வு செய்யப்பட்டு இறுதி செய்யப்படுகின்றன.

தமிழ்நாட்டை சேர்த்து மொத்தம் 29 மாநிலங்களிடம் இருந்து பரிந்துரைகள் வந்தன. தமிழ்நாடு அரசின் முன்வடிவு முதல் 3 சுற்றுகள் பரிசீலனையில் இருந்தது. 3 சுற்றுகள் முடிவில் இறுதி செய்யப்பட்ட 12 அலங்கார ஊர்திகளில் தமிழ்நாடு ஊர்தி இடம்பெறவில்லை. வல்லுநர் குழுதான் அலங்கார ஊர்தி அணிவகுப்பை தேர்வு செய்கிறது.” என்று கூறப்பட்டுள்ளது.

மேலும், கடந்த 2017, 2019, 2020, 2021 ஆகிய ஆண்டுகளில் தமிழகத்தின் அலங்கார ஊர்திகள் குடியரசு தின அணிவகுப்பில் இடம்பெற்றன என்றும் மத்திய அரசு அளித்துள்ள விளக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction