free website hit counter

புதுச்சேரி பெண்ணிடம் முகநூலில் அறிமுகமாகி நைஜீரியாவைச் சேர்ந்த இருவர் பணமோசடி

இந்தியா
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

புதுச்சேரியை சேர்ந்த பெண்ணிடம் முகநூல் மூலம் அறிமுகமாகி 13.65 லட்சம் ரூபாய் மோசடி செய்த நைஜீரியா நாட்டைச் சேர்ந்த இருவரை சைபர் க்ரைம் போலீஸ் டெல்லியில் கைது செய்து, புதுச்சேரிக்கு அழைத்து வந்து சிறையில் அடைத்தனர்.

புதுச்சேரி ராகவேந்திரா நகரைச் சேர்ந்தவர் மனோகரன், டைல்ஸ் கடை நடத்தி வருகிறார், இவரது மனைவி ஜெயந்தி (42), இவருக்கு முகநூல் மூலமாக வெளி நாட்டை சேர்ந்த எரிக்வால்கர் (போலி முகநூல் கணக்கு) என்பவர் அறிமுகமாகி தன்னை டாக்டர் என கூறி ஜெயந்தியுடன் பேசி வந்துள்ளார். அப்போது ஜெயந்தியின் மகள் பிறந்த நாளை முன்னிட்டு எரிக் வால்கர் தங்க நகை உள்ளிட்ட விலை உயர்ந்த பரிசு பொருள் அனுப்பியுள்ளதாக கூறியுள்ளார்.

இதனை அடுத்து கடந்த ஜூலை மாதம் 26ஆம் திகதி, டெல்லி விமான நிலையத்திலிருந்து பேசுவதாக ஜெயந்திக்கு அழைப்பு வந்துள்ளது, அதில் பேசிய பெண் ஒருவர் தான் விமான நிலைய அதிகாரி என்றும், இங்கிலாந்தில் இருந்து ஜெயந்திக்கு பார்சல் வந்துள்ளதாகவும் தெரிவித்த அவர், விலை உயர்ந்த பொருட்கள் இருப்பதால் அதற்கு அபராதம் செலுத்தினால் பொருளை விடுவிப்பதாக கூறி ஒரு வங்கி எண்ணை கொடுத்துள்ளார்.

அந்த பெண் கூறிய வங்கி கணக்கு எண்ணில் ஜெயந்தி ரூ.13 லட்சத்தி 65 ஆயிரம் பணத்தை 4 தவணையாக செலுத்தி உள்ளார், பணம் செலுத்தியும் பரிசு பொருள் ஏதும் விடுவிக்கப்படாததை அறிந்த ஜெயந்தி, தாம் ஏமாற்றப்பட்டதாக உணர்ந்து புதுச்சேரி சைபர் க்ரைம் போலீசில் புகார் அளித்துள்ளார், அவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது, ஜெயந்தியிடம் மோசடி செய்த கும்பல் டெல்லியில் இருந்து பணத்தை ஏமாற்றி இருப்பது தெரியவந்தது, இதனைத் தொடர்ந்து, சைபர் க்ரைம் ஆய்வாளர் கணேஷ், சார்பு ஆய்வாளர் சந்தோஷ், நந்தக்குமார் தலைமையிலான தனிப்படை டெல்லி சென்று அங்கிருந்த நைஜீரியா நாட்டை சேர்ந்த இஷிகோ பேட்ரிக், ஆண்டனி ஆகிய இருவரையும் கைது செய்தனர் அப்போது அவர்கள் நுழைவு சான்று (visa) காலாவதி ஆகி அவர்கள் இந்தியாவில் தங்கி இருப்பதும் தெரியவந்தது.

அதனைத் தொடர்ந்து, கைது செய்யப்பட்ட அவர்களை போலிசார் புதுச்சேரி அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிபதி அவர்களை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டதை அடுத்து அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் அடுத்த வாரம் அவர்களை போலிஸார் காவலில் எடுத்து விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction