இந்தியாவில் தற்போது பண்டிகைக் காலம். நவராத்திரி, தீபாவளி போன்ற பண்டிகைகள் வரவுள்ளன.
இந்நிலையில் அனைத்து மாநில அரசுகளின் தலைமை செயலாளர்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளின் நிர்வாகிகளுக்கு, மத்திய உள்துறை அமைச்சகத்தின் செயலாளர் அஜய் பல்லா எழுதி உள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:
கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த, தேவைப்பட்டால் 144 தடை உத்தரவை பயன்படுத்த வேண்டும். அதே போல், பண்டிகை காலம் நெருங்குவதால் கொரோனா தடுப்பு நடவடிக்கையை கண்காணித்து செயல்படுத்த வேண்டும். திருவிழாக்கள், கூட்டங்கள் போன்றவற்றால் கொரோனா பரவல் அதிகரிக்கலாம் என்பதால் கட்டுப்பாடுகள் அவசியம்.
மக்கள் கூடும் இடங்களில் கண்காணிப்பை அதிகரிக்க வேண்டும். கொரோனா தடுப்பூசி போடும் பணியை அதிகரிக்க வேண்டும். இது குறித்து மாவட்ட நிர்வாகங்கள் மற்றும் உள்ளூர் நிர்வாகங்களுக்கு, அந்தந்த மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் அறிவுறுத்த வேண்டும்.
இவ்வாறு கடிதத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
இதற்கிடையே, நாடு முழுவதும் அமுலில் உள்ள கொரோனா கட்டுப்பாடுகளை, வரும் அக்டோபர் மாதம் 31 ஆம் திகதி வரை நீடித்து மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது.