அமைச்சர்கள் யாரேனும் தவறு செய்தால், தவறு நடந்தது தெரிய வந்தால், அமைச்சர் பதவி பறிக்கப்படும் என்று ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய முதல்வர் ஜோசப் விஜய் அறிவுறுத்தியிருப்பதாகக் கூறப்படுகிறது.
தமிழ்நாட்டில் நடக்கும் தவெக அரசு, ஊழலற்ற அரசாக இருக்க வேண்டும், தவறு செய்தது யாராக இருந்தாலும் அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்படுவார்கள் என்றும் முதல்வர் விஜய் எச்சரித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று அமைச்சர்கள் பங்கேற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தமிழக முதல்வர் விஜய் பங்கேற்று பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார்.
கடந்த சில வாரங்களாக அமைச்சர்கள் அரசுப் பள்ளிகள், மருத்துவமனைகளுக்குச் சென்று ஆய்வு செய்வதாகக் கூறி விடியோ எடுத்து வெளியிடுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு, அது மக்களிடைய பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது.
இந்த நிலையில், முதல்வர் அலுவலகம் சார்பில் அமைச்சர்கள் யாரும் தேவையில்லாமல் பள்ளி போன்ற இடங்களுக்கு ஆய்வு செய்ய செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது.
அமைச்சர்கள் சிலரின் நடவடிக்கைகள் குறித்து தமிழக முதல்வர் ஜோசப் விஜய்க்கும் அதிருப்தி ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில்தான் இன்று அமைச்சர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டத்தில் நேரடியாகவே முதல்வர் விஜய் இது குறித்து தன்னுடைய கருத்தினை தெரிவித்திருப்பதாகவும், அமைச்சர்களுக்கு பதவி பறிக்கப்படும் என்று அறிவுறுத்தியிருப்பதாகவும் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் என்றெல்லாம் பார்க்க மாட்டேன். தவறு செய்தால் அமைச்சர் பதவி பறிக்கப்படும். ஊழலற்ற அரசாக இருக்க வேண்டும் எனவும் விஜய் வலியுறுத்திக் கூறியிருக்கிறார்.
மேலும், பள்ளிகளுக்குச் சென்றால் அமைச்சர்கள் விடியோ எடுக்கக் கூடாது, அதனை சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்யக் கூடாது என்றும் குறிப்பிட்டுப் பேசியதாகவும் தகவல்கள் வெளியாகின்றன.
