இன்று இந்தியாவின் 75வது சுதந்திர தினம். தலைநகர் டெல்லி செங்கோட்டையில் இன்று காலை பாரதப் பிரதமர் நரேந்திர மோடி மூவர்ணக்கொடியேற்றி வைத்து, வீர வணக்கம் செலுத்தினார்.
கொரோனா வைரஸ் தொற்று பரவல் நாடு முழுவதிலும் இருந்த போதும், மத்தியில், கட்டுபாடுகளுடன் நடைபெற்ற, இந்த விழாவில் மூத்த மத்திய மந்திரிகள், அரசியல் தலைவர்கள், வெளிநாட்டு தூதர்கள், நீதிபதிகள், உயர் அதிகாரிகள் என பல தரப்பினரும் கலந்து கொண்டனர். டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் சார்பில் பதக்கங்களைப் பெற்ற வீரர்கள், வீராங்கனைகள் சுதந்திர தின விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்து சிறப்பித்தனர்.
பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில், அனைவர்க்கும் முதலில் சுதந்திர தின நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார். மகாத்மா காந்தி, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உள்ளிட்ட அனைவரது தியாகங்களையும், விடுதலை போராட்ட வீரர்களையும் நினைவுகூர்ந்த அவர், ஒலிம்பிக்கில் பங்கேற்ற அனைவருக்கும் கைகளை தட்டி பாராட்டு தெரிவித்தார்.
இந்தியாவில் கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசியை உருவாக்கியுள்ளோம் என்பது பெருமைக்குரிய விஷயம்
கொரோனா காலத்தில் மருத்துவர்கள், செவிலியர்கள், தடுப்பூசி கண்டுபிடித்தவர்கள் என அனைவருக்கும் எனது வணக்கங்கள். உலகின் முன்னணி நாடுகளில் கொரோனா தடுப்பூசி எப்போது கிடைக்கத்தொடங்கியதோ அப்போது இந்தியாவிலும் கிடைக்கத்தொடங்கியது என்பது இந்தியர்களுக்கான பெருமை எனவும் குறிப்பிட்டார்.