உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடத்திற்கு நிச்சயம் முன்னேறும். நீண்ட கால திட்டங்களையும், யோசனைகளையும், மனதில் வைத்தே அனைத்து திட்டங்களையும் மத்திய அரசு மேற்கொள்வதினால் 2028ல் 3வது இடத்துக்கான முன்னேற்றம் நிச்சயம் நடக்கும் எனச் செய்தியாளர்களிடம் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
அவர் மேலும் பேசுகையில், 21-ம் நூற்றாண்டின் கால் பகுதியை நாம் கடந்துவிட்டோம். 2026 அடுத்த காலாண்டின் தொடக்கம். 2047ல் நமது விக்ஸித் பாரதம் இலக்கை அடைவதற்கான முக்கியமான கட்டம் தொடங்கியுள்ளது. இந்தவேளையில், நமது நாட்டின் நாடாளுமன்ற வரலாற்றில் பெருமையும், முக்கியமும், நிறைந்த தருணமாக நாட்டின் முதல் பெண் நிதியமைச்சரான நிர்மலா சீதாராமன், 9வது முறையாக நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்கின்றார். நேற்று ஆரம்பமாகிய கூட்டத் தொடரினை ஜனாதிபதி திரவுபதி முர்மு ஆரம்பித்து வைத்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது எனத் தெரிவித்தார்.
நேற்று ஆரம்பமாகிய நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் , 2026ம் ஆண்டின் முதல் கூட்டம் என்பதால், சம்பிரதாயபூர்வமான தொடக்க உரை நிகழ்த்துவதற்காக, ஜனாதிபதி திரவுபதி முர்மு நாடாளுமன்றம் வந்திருந்தார். அவருக்கு நாடாளுமன்றத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னதாக அவர் இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் ஆரம்ப உரையை நிகழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
