மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி பேரூராட்சிக்குட்பட்ட தரங்கம்பாடி சுனாமி குடியிருப்பு பகுதிகளில் 1500 க்கும் மேற்பட்ட மீனவ குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
கடந்த 2004 சுனாமிக்கு பிறகு இவர்களுக்கு சுனாமி குடியிருப்புகள் கட்டப்பட்டு அதில் வசித்து வருகின்றனர்.இந்த நிலையில் சுனாமி குடியிருப்பில் வசிப்பவர்கள் பயன்பாட்டிற்காக கடந்த 2012 - 2013 ஆம் ஆண்டில் பாதாள சாக்கடை திட்டம் மூலம் கழிவு நீர் கால்வாய்கள் அமைக்கப்பட்டது.
ஆனால் சில ஆண்டிலேயே அதன் பயன்பாடு பழுதாகி நின்றதால் வீடுகளில் இருந்து செல்லும் கழிவு நீர் அடைப்பு ஏற்பட்டு வீதிகளிலும், சாலைகளிலும் கழிவு நீர் வழிந்தோடுகிறது.இவ்வாறு பல ஆண்டுகளாக கழிவுநீர் ஓடுவதால் இந்த பகுதியில் சுகாதார சீர்கேட்டுடன் மீனவர்கள் வசித்து வருகின்றனர். சாலையில் ஓடும் கழிவு நீரால் துர்நாற்றம் வீசுவதோடு நாள்தோறும் நோய் பரவும் அபாயத்திலேயே வசித்து வருகின்றனர்.
மேலும் மழைக்காலத்தில் மழைநீரில் கழிவு நீர் கலந்து வீடுகளை சுற்றி நிற்பதோடு, குடிநீரிலும் கழிவு நீர் கலக்கும் நிலை உள்ளதாக மீனவர்கள் கூறுகின்றனர். எனவே தங்கள் சுகாதாரத்தை மீட்க அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.