விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் தாளவனூர் கிராமம், கடலூர் மாவட்டம் எனதிரிமங்கலம் கிராமம் ஆகியவற்றுக்கு இடையே தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே 25 கோடியே 37 லட்சம் மதிப்பீட்டில், கடந்த 2019-ஆம் ஆண்டு தடுப்பணை கட்டப்பட்டது.
இந்த தடுப்பணை கடந்த 2020-ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. தென்பெண்னை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் சுமார் 14 அடி உயரம் கொண்ட இந்த தடுப்பணை முழுவதும் நிரம்பும் அளவிற்கு நீர் வழிந்தோடியது. இதனால் ஒன்றரை மாதத்திற்கு உள்ளாகவே தடுப்பணை உடைந்து நீர் வெளியேறியதால் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஒரு மாதத்திற்கு மேலாகத் தடுப்பணையில் தண்ணீர் தேங்கியிருந்தது. குறிப்பாக இந்த தடுப்பணை மூலமாக தேக்கி வைக்கும் நீரானது எனதிரிமங்கலம் அடுத்துள்ள நீர் வரப்புகளான சுமார் 14 ஏரிகளுக்குமே செல்கிறது. இந்த நீர் தான் விழுப்புரம் தளவானூர் அடுத்துள்ள சுமார் 50க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கும் முக்கிய நீர் ஆதாரமாக காணப்படுகிறது.
தடுப்பணை உடைந்த விவகாரம் தொடர்பாகத் தமிழக அரசு விசாரணைக்கு உத்தரவிட்டது. அதன் அடிப்படையில், நீர்வளப்பிரிவு முதன்மை தலைமைப் பொறியாளர் ராமமூர்த்தி தலைமையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்த விசாரணையில், நீர்வளத்துறை தலைமை பொறியாளர் உட்பட நான்கு பொறியாளர்களை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து பொதுப்பணித்துறை முதன்மை செயலாளர் மணிவாசன் அரசாணை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து திமுக சட்டமன்ற உறுப்பினர் பொன்முடியிடம் பேசியபோது, "புதிதாக கட்டப்பட்ட இந்த தடுப்பணை ஒரு மாதம் கூட தாக்குப் பிடிக்கவில்லை. திறந்து 33 நாட்களில் உடைந்துவிட்டது. தரமில்லாமல் கட்டப்பட்டதால் இந்த தடுப்பணை சாதாரண மழை தண்ணீருக்கே விழுந்துவிட்டது. குறிப்பாக 40, 50 சதவீத கமிஷனுக்காக இதுபோன்ற பணியை செய்ய ஒப்பந்ததாரர்களிடம் வேலையை கொடுக்கின்றனர். அவர்கள் பெறும் குறைந்த பணத்தை கொண்டு எவ்வாறு தரமுள்ள தடுப்பணை கட்ட முடியும். இதில் தற்போது சில அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்துள்ளனர். ஆனால் இதில் தொடர்புடைய ஒப்பந்ததாரர்கள் அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்," எனத் தெரிவித்துள்ளார்.