திமுக அமைச்சரவையில் நிதி அமைச்சர் யார் என்று அதிகாரப்பூர்வ பட்டியல் வெளியாகும் முன்பே பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. துரை முருகன் நிதி அமைச்சராக இருப்பார் என்றெல்லாம் கூறப்பட்டது.
ஆனால், முன்னாள் சபாநாயகர் பிடி பழனிவேல் ராஜனின் மகனும் மதாராஸ் மாகாணத்திற்கு ஆங்கிலேய ஆட்சி காலத்தில் முதல்வராக இருந்த தியாகராசரின் பேரனுமான பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனை நிதி அமைச்சராக நியமித்தார். காரணம், தியாகராஜன் அமெரிக்காவின் பொருளாதாரம் படித்து, பின்னர், ஸ்டாண்டர்டு சார்ட்டட் வங்கியில் உயர் பொறுப்பில் பணியாற்றி வந்த நிலையில், அவரை அழைத்தே கட்சியில் பொறுப்புக் கொடுத்து, மதுரையில் போட்டியிட வாய்ப்பும் கொடுத்து, அவரை மாநில நிதி அமைச்சராகவும் ஆக்கியிருக்கிறார் மு,க.ஸ்டாலின்.
அதேபோல், இணைய வழியாக நடத்தப்பட்ட ஒன்றிய அரசின் ஜி.எஸ்.டி. கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பி.டி.ஆர். தியாகராஜன் மாநில சுயாட்சி மற்றும் உரிமைகள் குறித்தும் ஒன்றிய அரசின் வரி விதிப்பு முறை குறித்தும் கடும் விமர்சனங்களை முன்வைத்துப் பேசியது பெரும் பரபரப்பானது. இவை தவிர, ஊடகங்களுக்கு பி.டி.ஆர்.பழனிவேல் ராஜன் அளித்து வரும் பேட்டிகளும் பெரும் பரபரப்பை கிளப்பின.
இதனால், தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், மாநில அமைச்சர்கள், மத்திய அரசை விமர்சிக்காமல் இணக்கமான போக்கை கடைபிடிக்க வேண்டும், இல்லாவிட்டால் மாநில அரசுக்கு ஆதரவு கிடைக்காது என்கிற ரீதியில் எதிர்ப்பைக் காட்ட, தற்போது தமிழ் நாட்டில் உள்ள எதிர் அரசியல்காரர்கள் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜனை எப்படியாவது அடக்கிவிடவேண்டும் என்று கங்கனம் கட்டிக்கொண்டு செயல்பட்டு வருகிறார்கள். சமுக வலைதளங்களிலும் தியாகராஜனுக்கு எதிரான பரப்புரைகள் கன ஜோராக நடந்து வருகின்றன.
இவையெல்லாம் ஒரு பக்கம் இருக்க, சொந்த கட்சியிலேயே தியாகராஜனுக்கு ஆப்பு வைக்க மூத்த தலைவர்கள் முன்வந்துவிட்டதாகத் தெரிகிறது. டெல்லியில் காத்துக் கிடக்கும் டி.ஆர்.பாலுவும், துரைமுருகனும் முதல்வர் ஸ்டாலினிடம் தியாகராஜனை அடக்கி வைக்காவிட்டால் முதலுக்கே மோசமாகிவிடும் என்று கதறியிருக்கிறார்கள்.
இதனால் நிதியமைச்சர் தியாகராஜனை அழைத்த ஸ்டாலின் ‘முதலில் மீடியாவுக்கு பேட்டி கொடுப்பதை நிறுத்துங்கள். ஆட்சி ஒரு வருடத்தைக் கடக்கட்டும். பேட்டி என்று வரும்போது வாயைப் பிடுங்கி நமக்கு எதிராக ஒன்றிய அரசை திருப்ப, தமிழ் மீடியாவில் நிறைய பாஜக சங்கிகள் இருக்கிறார்கள். அதனால், உங்களுடைய திறமை அனைத்தையும் பட்ஜெட் போடுவதிலும் பட்ஜெட் கூட்டத் தொடரிலும் காட்டுங்கள்.” என்று சூடு கொடுத்துவிட்டாராம். கொந்தளித்துக் கிடக்கிறது பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் வட்டாரம்.
-4தமிழ்மீடியாவுக்காக: மாதுமை