சுவிற்சர்லாந்தின் அனைத்து மாநிலங்களிலும், ஐம்பது சதவீத மக்கள் ஒரு சில வாரங்களில் கொரோனா வைரஸைக் கொண்டிருக்கலாம் என கோவிட்-19 பணிக்குழு உறுப்பினர் ரிச்சர்ட் நெஹரின் எதிர்வு கூறியுள்ளார்.
சுகாதார வல்லுநர்கள் ஏற்கனவே கணித்தபடி, நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை ஒரு நாளைக்கு 20,000 ஆக உயரும் என்று எதிர்பார்க்கப்படுவதால், இந்த சூழ்நிலை ஏற்படலாம் என்பது நம்பத்தகுந்ததாக இருக்கிறது என்று நெஹர் மேலும் கூறினார்.
நோய் தொற்றினைக் கொண்டிருக்கக் கூடிய நபர்கள் பலர் சோதிக்கப்படவில்லை, எனவே அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களில் சேர்க்கப்படவில்லை. ஆதலால் புள்ளி விபரங்கள் தெரிவிக்கும் எண்ணிகையைவிட அதிகமாகவே நோய் தொற்று ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளது. ஒட்டுமொத்தமாக ஒமிக்ரான் குறைவாக இருப்பதாக நம்பப்பட்டாலும், குறிப்பாக தடுப்பூசி போடப்பட்டவர்களில், பாதி மக்கள் பாதிக்கப்பட்டிருப்பது மருத்துவமனைகளை கணிசமாக பாதிக்கும் என்றும் அவர் கூறினார்.
தொற்று நோயியல் வேகமாகப் பரவும் சூழ்நிலையில், புதிய கோவிட் விதிகள் வரும் புதன்கிழமை முடிவு செய்யப்படும் என அரசு தெரிவித்துள்ளது. தற்போதைக்கு, ஃபெடரல் கவுன்சில் கொரோனா வைரஸின் பரவலைக் கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கைகளை அறிமுகப்படுத்துவதைத் தவிர்த்து வரும் நிலையில், ஓமிக்ரானின் அபாயங்கள் குறித்து போதுமான தகவல்கள் கிடைக்கும் பட்சத்தில் அடுத்தசில நாட்கள் முக்கியமானவை என்று கோவிட் பணிக்குழுத் தலைவர் லூகாஸ் ஏங்கல்பெர்கர் கூறினார்.
இதேவேளை சுவிற்சர்லாந்தின் வோ மாநிலத்தில் உள்ள, ஃபெடரல் பாலிடெக்னிக் இன்ஸ்டிடியூட் ஆஃப் லாசேன் (EPFL) இன் ஆராய்ச்சியாளர்கள் உலகின் மிக சக்திவாய்ந்த எலக்ட்ரான் நுண்ணோக்கிகளைப் பயன்படுத்தி ஓமிக்ரானின் மர்மங்களை உடைத்து,இந்த புதிய மாறுபாடு தடுப்பூசிகள் மற்றும் ஆன்டிபாடிகளில் இருந்து தப்பிக்கும் வழிமுறைகளப் புரிந்துகொள்ள ஆராய்ந்து வருகிறார்கள். இந்த ஆய்வின் முடிவுகள், கோவிட்-19 தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் மதிப்புமிக்கது மற்றும் புதிய சிகிச்சை அணுகுமுறைகளுக்கு வழி வகுக்கும் என்று EPFL இன் தொற்றுநோயியல் நிபுணரும் பேராசிரியருமான டிடியர் ட்ரோனோ கூறுகிறார்.