இங்கிலாந்திலிருந்து இத்தாலி வருபவர்களுக்கு தனிமைப்படுத்தல் தேவைப்படுமா ?.
" இத்தாலிக்குள் நுழைபவர்களை நாங்கள் சோதிக்கிறோம். இத்தாலியில் நோய்த்தொற்றுகள் மீண்டும் உயரத் தொடங்கினால், இங்கிலாந்திலிருந்து வருபவர்களுக்கான தனிமைப்படுத்தலை மீண்டும் செயற்படுத்த வேண்டி வரும். ஆனால் தற்போது அது நடைமுறையில் இல்லை ” என, இங்கிலாந்தில் நடந்த ஜி 7 கூட்டத்தின் முடிவில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் இத்தாலியின் பிரதமர் மரியோ டிராகி கூறினார்.
இந்தியாவில் முதன்முதலில் கண்டறியப்பட்ட டெல்டா மாறுபாட்டுத் தொற்றுக்குகள் விரைவாக உயர்ந்துள்ள நிலையில், பிரிட்டிஷ் அரசாங்கம் நேற்று திங்கட் கிழமை, பூட்டுதல் கட்டுப்பாடுகளை தளர்த்துவதை நான்கு வாரங்களுக்கு பின்னுக்குத் தள்ளலாம் என பிரித்தானிய செய்திச் சேவைகள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பாக இத்தாலியின் நிலைப்பாடு குறித்துக் கேட்ட போது, "நோய்த்தொற்றுகள் அதிகரிக்கும் பட்சத்தில் இந்த நடைமுறை குறித்து ஆராய்வோம். ஆனால் டெல்டா மாறுபாட்டினை மற்ற ஐரோப்பிய நாடுகளில் நாம் காணவில்லை" என்று அவர் மேலும் கூறினார்.
ஆயினும், பிரான்ஸ், ஜெர்மனி, சுவிற்சர்லாந்து மற்றும் ஆஸ்திரியா ஆகியவை கடந்த மாதம் டெல்டா குறித்த கவலைகளின் மத்தியில், இங்கிலாந்திலிருந்து வரும் பயணிகளுக்கு தனிமைப்படுத்தப்பட்ட விதிகள் மற்றும் பிற கடுமையான பயணக் கட்டுப்பாடுகளை மீண்டும் நடைமுறைப்படுத்தியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.