டென்மார்க்கில் கோவிட் -19 தொற்றுநோயை நிர்வகிப்பது குறித்து அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்கும் தொற்றுநோய் ஆணையம், கட்டுப்பாடுகள் தொடர வேண்டுமா என்பது தொடர்பாக புதிய பரிந்துரைகளை வழங்கியுள்ளது.
இது தொடர்பான அறிவிப்பினை, பிரதமர் மெட்டே ஃபிரடெரிக்சன் இன்று புதன்கிழமை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போதைய கோவிட்-19 கட்டுப்பாடுகளை ஜனவரி 31 ஆம் திகதி முடிவுக்கு கொண்டுவர பரிந்துரைப்பதாக ஆணையம் கூறியுள்ளது. ஆனால் டென்மார்க்கிற்கான பயணத்திற்கான நுழைவு சோதனை மற்றும் தனிமைப்படுத்தல் விதிகள் நீட்டிக்கப்பட்டுள்ளன. மருத்துவமனைகளிலும், முதியோர் பராமரிப்பிலும் முகக்கவசம் பயன்படுத்துவது தொடர வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
ஆணையத்தின் பரிந்துரைகளை அரசு பின்பற்றினால், கோவிட்-19 சமூகத்திற்கு ஒரு முக்கியமான அச்சுறுத்தலாக வகைப்படுத்தப்படுவது நிறுத்தப்படும். இது தொடர்பில் அரசின் முடிவினை பிரதமர் ஃபிரடெரிக்சன் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.