ஒரு சில நாட்களில் முடிந்துவிடும் என எதிர்பார்க்கப்பட்ட உக்ரைன் யுத்தம் 40வது நாளில் நிற்கிறது. இதேவேளை இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னர் பெரும் இழப்புக்கள் எதையும் கண்டிராத மேற்கு ஐரோப்பிய மக்கள் தங்கள் எல்லையில் நடந்துள்ள போர் அவலங்களால் அதிர்ந்து போயுள்ளனர்.
மேற்குல ஊடகங்களில் இன்றைய நாளில் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது உக்ரைனின் புச்சா bucha நகரம். புச்சா நகரைக் கைப்பறியிருந்த ரஷ்ய படைகளின் ளியேற்றத்திற்குப் பிறகு , புச்சாவின் தெருக்களில், வெகுஜன புதைகுழிகளில் சிதறியிருக்கும் டஜன் கணக்கான சடலங்களின் படங்கள் மேற்கத்திய உலகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளன.
இந்த மேற்குலக நாடுகளின் ஆதரவுடன் உலகெங்கும் நிகழ்ந்த போரின் போதெல்லாம், அந்தப் பகுதி மக்கள் இதே அவலங்களைச் சுமந்து நின்றார்கள் என்பதை இப்போதும் மேற்குலகம் உணந்திருக்குமா என்பது கேள்விக் குறி.
புச்சாவில் இருந்து வெளிவரும் படுகொலைகளின் திகில் நிறைந்த சாட்சியங்கள் ரஷ்யாவின் இனப்படுகொலையின் கோர முகம் என உக்ரைன் கூறுகிறது. அதே நேரத்தில் பேச்சுவார்த்தைகளைத் தடுக்க உக்ரேனியர்களின் ஆத்திரமூட்டல் நடவடிக்கை இதுவென ரஷ்யா கருதுகிறது. மேற்கு நாடுகளும் கோபமடைந்து ரஷ்யா மீதான மேலும் பலற தடைகளை அச்சுறுத்துகின்றன. புதிய பொருளாதார தடைகள் ரஷ்ய எரிசக்தி துறையை கடுமையாக தாக்கும் சாத்தியத்தை தூண்டுவதாகத் தெரிய வருகிறது. இதேவேளை இன்று லக்சம்பேர்க்கில் நிதி அமைச்சர்கள் நெருக்கடியின் பொருளாதார தாக்கம் குறித்து விவாதிப்பார்கள் எனத் தெரிய வருகிறது.
இதேவேளை உக்ரைன் படையெடுப்பில் கடுமையான மற்றும் எதிர்பாராத இழப்புகளை எதிர்கொள்ளும் வகையில், போரில் இழந்த படைகளை மீண்டும் கட்டமைக்க புடின் மேலும் 60,000 வீரர்களை அணிதிரட்ட விரும்புகிறார் என பிரித்தானிய உளவுத்துறைச் செய்திகளை ஆதாரங்காட்டி, பிரித்தானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.