சமூகவலைத்தளங்கள் மனித குலத்துக்குச் சாபமா? வரமா? என சிந்திக்கவைக்கும் மற்றுமொரு சமபவம் கேரளாவில் நிகழ்ந்துள்ளது. இவ்வாறான செய்திகளுக்கு நாம் முக்கியத்துவம் தருவதில்லை என்ற போதும், ஒரு விளையாட்டு எவ்வாறு விபரீதமாக மாறியிருக்கிறது என்பதைத் தெரிவிப்பதற்காக இந்தச் செய்தி...
கடந்த மாதம், கேரள மாநிலம் பாலக்காட்டில், சொந்த வீட்டுக்குள்ளேயே, அப்பா, அம்மா மற்ற ரத்த சொந்தங்களின் கண்களில் படாமல் காதலியை ஒரு அறையில் மறைத்து வைத்து 10 ஆண்டுகள் குடும்பம் நடத்திய காதலன் பிடிப்பட்ட கதை வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது நினைவிருக்கலாம். தற்போது கேரளத்திலிருந்து மற்றொரு உலுக்கும் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
கேரளத்தின் கொல்லம் அருகே இருக்கிறது கல்லுவாதுக்கல் என்ற ஊர். அந்த ஊரைச் சேர்ந்த 24 வயது ரேஷ்மா, விஷ்ணு என்பவரை பெற்றோர் ஏற்பாட்டுத் திருமணம் மூலம் இல்லற வாழ்வில் இணைந்தார். விஷ்ணு, வளைகுடா நாட்டில் மின் பொறியாளர் வேலை செய்கிறார். இந்த தம்பதிக்கு ஏற்கெனவே ஒரு குழந்தை இருந்தது. இந்நிலையில், ரேஷ்மா மீண்டும் கருவுற்றார். அந்த மகிழ்ச்சி செய்தியை கணவரிடம் சொல்ல இருந்த நிலையில்தான், முகநூலில் ஆனந்த் என்ற பெயரில் நட்பு வேண்டுகோள் அவருக்கு வந்தது. ஆனால் அது நிஜத்தில் ஆண் அல்ல. தனது உறவினர்கள்தான் தன்னிடம் விளையாடுகின்றனர் என தெரியாமல் அந்த நட்பழைப்பர் ஏற்றுள்ளார் ரேஷ்மா.
முகநூலின் மெசஞ்சர் செயலியில் வந்து உரையாடிய, நேரில் பார்க்காத அந்த நபர் மீது காதல் வயப்பட்ட அவர், தான் ஏற்கெனவே ஒரு குழந்தைக்கு தாயாக இருப்பதையும், தற்போது இன்னொரு குழந்தையை வயிற்றில் சுமப் பதையும் கூறியிருக்கிறார். உடனே அந்தக் காதலன், “ஒரு குழந்தையுடன் வந்தால் மட்டுமே உன்னை ஏற்றுக்கொள்ள முடியும்” எனச் சொல்லியிருக்கிறார். புதிய வாழ்க்கைக்கு ஆசைப்பட்ட ரேஷ்மாவும், தான் கருவுற்று இருப்பதை தன் கணவர் விஷ்ணு மற்றும் அவரது குடும்பத்தினரிடம் கூறவில்லை. இதனிடையே, விஷ்ணு மீண்டும் வளைகுடா சென்றார். பேறுகாலம் நெருங்கியதும் வீட்டிலேயே ஆண் குழந்தையை பெற்றெடுத்த ரேஷ்மா, குழந்தையை அருகில் இருந்த ரப்பர் தோட்டத்தில் வீசிவிட்டு கமுக்கமாக இருந்துவிட்டார். அக்கம்பக்கத்தினர் கொடுத்த தகவலையடுத்து அங்கே விரைந்த போலீஸார், குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சைப் பலனின்றி குழந்தை இறந்தது.
அதன்பின்னர்தான் சினிமாவை விஞ்சும் காட்சிகள் நிஜமாக அரங்கேறின. குழந்தையை தூக்கி வீசியது யார் எனக் கண்டுபிடிக்க அப்பகுதியில் இருந்த இளம்பெண்கள் பலருக்கும் டிஎன்ஏ சோதனையை காவல்துறை நடத்தியது. இதையறிந்து ரேஷ்மா மட்டும் எனக்கு நோய் உள்ளது எனக் கூறி தப்பிக்கப் பார்த்துள்ளார். ஆனால் போலீஸார் விடவில்லை. அவருக்கும் சோதனை எடுக்கப்பட்டதில் வசமாகச் சிக்கினார் ரேஷ்மா. கடந்த 22-ம் தேதி கைது செய்யப்பட்ட ரேஷ்மா தன்னுடைய முகநூல் காதலால் செய்த விபரீதத்தை சொல்லியுள்ளார்.
கேரள போலீஸார் விரைந்து சைபர் கிரைம் உதவியுடன் துப்புதுலக்கிய போது, ரேஷ்மாவிடம் முகநூலில் பேசியிருப்பது அவரது உறவினர் 23 வயது ஆர்யாவும் 22 வயது கரீஷ்மாவும்தான் என்பது தெரிய வந்துள்ளது. ரேஷ்மாவை ஃபிராங்க் செய்வதற்காக அவர்கள் இவ்வாறு நாடகமாடியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில் போலீஸார் தங்களை நெருங்குவதை அறிந்து பயந்து போன ஆர்யாவும், கரீஷ்மாவும் ஒரு குளத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்டனர். இந்த விவகாரம் கல்வியறிவு மிக்க கேரள மாநிலத்தை உலுக்கியிருக்கிறது.