மார்ச் 8 ஆம் திகதியான இன்று சர்வதேச மகளிர் தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.
நியாயமான மற்றும் பாதுகாப்பான வேலைவாய்ப்பு, வாக்களிக்கும் உரிமை மற்றும் பொது பதவியை வகிக்கும் உரிமை உள்ளிட்ட பாலின சமத்துவத்தை அடைவதற்கான பொதுவான இலக்குகளை அடைவதற்காக பெண்களால் கொண்டுவரப்பட்டதே இத்தினம். ஆண்டுதோரும் பல்வேறு நாடுகளில் மக்கள் சமூகத்தை மாற்றியமைத்த பெண்களைக் மக்கள் கொண்டாடுகிறார்கள்.
IWD (International Women's Day) அமைப்பினால் மகளிர் தின நிறமாக ஊதா வண்ணத்தை அடையாளப்படுத்துகிறது. இத்தினத்தில் மகளிர் தின பல்வேறு பேரணிகள், பொதுக்கூட்டங்களில் ஊதா நிற ஆடைகளில் மக்கள் காணப்படுவதை அவதானிக்கலாம். ஊதா வண்ணத்துடன் வெள்ளை மற்றும் பச்சை ஆகிய நிறங்களையும் அதற்கான அர்த்தங்களையும் IWD அமைப்பு இவ்வாறு கூறுகிறது; ஊதா - நீதி மற்றும் கண்ணியத்தையும், பச்சை - நம்பிக்கையையும் மற்றும் வெள்ளை - தூய்மையையும் குறிக்கிறது. பெரும்பாலும் ஊதா நிற அடையாளத்துடன் மகளிர் தினம் முன்னெடுக்கப்படுகிறது.
ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் உள்ள சமகால ஆய்வுகளின்படி, ஊதா நிறமானது பெரும்பாலும்; ராஜாங்கம், ஆடம்பரம், லட்சியம், மந்திரம், மர்மம் மற்றும் ஆன்மீகம் ஆகியவற்றுடன் தொடர்புடையதாக தெரிவிக்கிறது. ஊதாவுடன் இளம் சிவப்பும் இணையும் போது அது பெண்மை, மாயை எனவும் தொடர்பை காட்டுகிறது.
முதன்முதலாக இங்கிலாந்தில் 1903ம் ஆண்டு பெண்களின் வாக்கு உரிமைக்காக போராடுவதற்காக அமைக்கப்பட்ட ஒரு குழுவான; பெண்கள் சமூக மற்றும் அரசியல் ஒன்றியம் (WSPU) இந்த வண்ணங்களைப் பயன்படுத்தியது.
1909 இல் WSPU வழங்கிய உண்ணாவிரதப் பதக்கம்.
அமெரிக்காவில் 1970 முதல் பயன்படுத்தப்பட்ட பெண்ணிய இயக்கத்தின் சின்னத்தின் ஊதா நிறம் அரை நூற்றாண்டுக்கு முன்னர் வாக்குரிமை' இயக்கத்திற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் தேர்ந்தெடுக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து ஊதா நிறம் சர்வதேச பெண்கள் தின அமைப்பால் விழிப்புணர்வுக்காக பயன்படுத்தப்பட்டுவருகிறது. வண்ணத்தின் மூலம் சமூகங்களிடையே பெண்ணிய எண்ணத்தில் மாற்றத்தினை ஊக்குவிக்கும் ஒரு வழியை இந்த அமைப்பு செயல்படுத்திவருகிறது. சர்வதேச நாடுகளின் தலைநகரத்தில் உள்ள அடையாள சின்னங்களில் மகளிர் தின சிறப்பாக ஊதா நிறத்தை ஒளிரச் செய்வதை வழக்கமாக்கியுள்ளனர்.
மகளிர் தினம் என்பது இணைந்து செயலாற்றும் சமூகத்தையும் சமத்துவத்தையும் வலுப்படுத்தும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இதன் நோக்கமாகும். #inspire inclusion - உள்ளடக்கத்தை ஊக்குவி எனும் கரும்பொருளில் இவ்வாண்டும் 'IWD லைட் அப்' எனும் கூட்டுப் பிரச்சாரம்; IWD இன் அடையாளமான ஊதாவண்ண விளக்குகள் - உலகின் ஒவ்வொரு மூலையிலும் ஒளிரப்போகிறது. வருடந்தோரும் நேர்மறையான செய்திகளை பரவச்செய்வதற்காக தங்கள் கட்டிடங்களில் ஒளிரச் செய்வதில் நிறுவனங்களும் ஒத்துழைத்து வருகின்றன.
சர்வதேச அடையாளமான ஊதா வண்ணம்; IWD லைட் அப் பிரச்சாரம் 2024 இனை வழிநடத்தும் சின்னங்கள்..
இவை தவிர ஐக்கிய நாடுகள் சபை அண்மையில் வெளியிட்டுள்ள அறிக்கையில் உலகில் ஒவ்வொரு 10 பெண்களில் 1 பெண் கடும் வறுமையில் வாழ்கிறார் என தெரிவித்துள்ளது.
போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வாழும் பெண்கள் மற்றும் சிறுமிகளின் எண்ணிக்கை 2017 இல் இருந்து இரட்டிப்பாகியுள்ளது. மேலும் அந்த அறிக்கையில் பருவநிலை மாற்றத்தால் 236 மில்லியன் பெண்களையும் சிறுமிகளையும் 2030 ஆம் ஆண்டிற்குள் பசியுடன் இருக்கவைக்கும் என்றும் இது ஆண்களை விட இரண்டு மடங்கு அதிகமாகும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
இவற்றை கருத்தில் கொண்டு சர்வதேச மகளிர் தினத்தன்று, பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதற்கும், மேலும் வளமான, சமத்துவமான சமூகங்களை உருவாக்குவதற்கும் சிறந்த வழியாக "பெண்களில் முதலீடு செய்யுங்கள், முன்னேற்றத்தை விரைவுபடுத்துங்கள்" என ஐ.நா மகளிர் உலகிற்கு அழைப்பு விடுக்கின்றனர்.
Source : IWD.com