இந்தியாவை பொருத்தவரை, கொரோனா முதல் அலைக்கும், இரண்டாம் அலைக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. இந்த பட்டியலில் இந்திய இணைய எதிர்வினையையும் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
அதாவது கொரோனா பாதிப்பை எதிர்கொள்ள உதவும் வகையில் இணையம் மூலம் மேற்கொள்ளப்படும் முயற்சிகள் இந்த முறை அதிகரித்துள்ளன.
அரசு கோட்டை விட்டாலும், இணையம் கோட்டை விட்டுவிடவில்லை என சொல்லும் அளவுக்கு, கொரோனா கால இணையதளங்கள் மிக வேகமாக அமைக்கப்பட்டு டிஜிட்டல் உதவிக்கரம் நீட்டப்பட்டு வருகின்றன.
இந்த போக்கிற்கு உதாரணமாக, ’இந்தியாகோவிட்ரிசோர்சஸ்’ (https://indiacovidresources.in/ ) தளத்தை குறிப்பிடலாம். இந்த தளம் கொரோனா தொடர்பான உதவிகளை ஒருங்கிணைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
புதுமையான முறையில் ஸ்மார்ட்போன் திரை வடிவில் தகவல்களை அணுகும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்த தளத்தில், முக்கிய நகரங்களில் கொரோனா நோயாளிகளுக்கு கிடைக்கும் உதவிகளை தேடி கண்டறியலாம்.
உதாரணமாக தில்லி அல்லது பெங்களூரு ஆகிய நகரங்களில் ஆக்சிஜன் செறிவூட்டிகள் கிடைக்குமிடங்கள் அல்லது கொரோனா உதவி எண்களை தெரிந்து கொள்ளலாம். அதே போல, நேரடியாக குறிப்பிட்ட நகரங்களில் ஆக்சிஜன் அல்லது கொரோனா மருந்து கிடைக்குமிடங்களை தேடலாம்.
கொரோனா பாதிப்புக்கு உதவி கேட்டு டிவிட்டரில் குறும்பதிவுகளாக வெளியாகத்துவங்கிய கோரிக்கைகளை அடுத்து பலரும் தங்களால் இயன்ற உதவிகளை டிவிட்டர் மூலம் பகிர்ந்து கொள்ளத்துவங்கியுள்ளனர். டிவிட்டரில் இப்படி வெள்ளமென வெளியாகும் தகவல்களில் இருந்து தேவையான தகவல்களை தொகுத்தளிக்கும் விதமாக இந்த தளம் அமைக்கப்பட்டுள்ளது.
தகவல்கள் விரிவானவை என்று சொல்வதற்கில்லை. ஆனால், தன்னார்வலர்களால் சரி பார்க்கப்பட்ட தகவல்கள் பகிரப்படுகின்றன. 200 க்கு மேற்பட்ட தன்னார்வலர்கள் இந்த பணியை செய்து வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
நாடு தழுவிய அளவில் கொரோனா வளங்களை அளிக்கும் தளமாக அறியப்பட்டாலும், இந்த தளத்தில் பெங்களூரு, தில்லி, புனே, அகமதாபாத் மற்றும் மும்பை உள்ளிட்ட நகரங்கள் தொடர்பான தகவல்களே இடம்பெற்றுள்ளன. மற்ற நகரங்களில் நிலைமை அந்த அளவு மோசமில்லை என்பதாகவும் எடுத்துக்கொள்ளலாம்.
இந்த தளத்தின் பின்னே உள்ள மென்பொருள் துறையினர், கொரோனா நிவாரணத்திற்கு நிதி அளிக்க வழி செய்யும் துணை தளம் ஒன்றையும் அமைத்துள்ளனர். –https://donate.indiacovidresources.in/#donateplasma
கொரோனா நிவாரணத்திற்காக நிதி அளிக்க கூடிய நம்பிக்கையான சேவை அமைப்புகள் இந்த தளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளன. கொரோனா இரண்டாம் அலையை சமாளிக்க நாங்கள் நன்கொடை அளித்துள்ளோம், நீங்களும் நிதி அளித்து, கூட்டாக இந்த சவாலை எதிர்கொள்ள உதவுப்க்கள் என இந்த தளம் வேண்டுகோள் வைக்கிறது.