யுத்த சூழல் மத்திய கிழக்கு, வளைகுடா நாடுகள் தொடர்புடைய விமான பயணிகளை கடுமையாக பாதித்திருக்கும் இந்நிலையில் யுனைடெட் ஏர்லைன்ஸ் புதிதாக நீண்ட தூர பயணங்களுக்கான படுக்கை இருக்கைகளை தமது விமானத்தில் அறிமுகப்படுத்தவுள்ளது.
பலமணிநேர விமான பயணங்களில் நெரிசலான எகானமி இருக்கைகள் அசௌகரியமாக இருக்கலாம். இதை கருத்தில் கொண்டு முதல் வகுப்பு விமான சீட்டுக்கு அதிக செலவு செய்யாமல் கால் நீட்டி படுத்துக்கொள்ள விரும்புவோருக்கு ஒரு மாற்றமாக யுனைடெட் ஏர்லைன்ஸ் (United Airlines) 'ரிலாக்ஸ் ரோ' என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
சிறு குழந்தைகளுடன் பயணம் செய்யும் குடும்பங்களைக் கருத்தில் கொண்டு இந்த யோசனை உருவாக்கப்பட்டிருந்தாலும், தம்பதிகள் அல்லது தனியாகப் பயணிப்பவர்கள் என, உறங்குவதற்கும், தொலைக்காட்சி பார்ப்பதற்கும், அல்லது வெறுமனே படுத்துக்கொள்வதற்கும் இன்னும் கொஞ்சம் இடம் தேவைப்படும் எவருக்கும் இது கிடைக்கும். ஒவ்வொரு விமானத்திலும் 12 ரிலாக்ஸ் ரோக்கள் வரை கிடைக்கும், மேலும் அவை யுனைடெட் எகானமி மற்றும் யுனைடெட் பிரீமியம் பிளஸ் வகுப்புகளுக்கு இடையில் அமைந்திருக்கும்.
அடுத்தாண்டு (2027) யுனைடெட் நிறுவனம் 90 விமானங்களில் 'ரிலாக்ஸ் ரோஸ்' திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளது. மேலும், 2030-ஆம் ஆண்டுக்குள் தனது 200 போயிங் 787 மற்றும் 777 ரக பெரிய ரக விமானங்களுக்கு இதனை விரிவுபடுத்தவும் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. எனினும் இவ் இருக்கைக்கான கட்டண விவரங்கள் குறித்து யுனைடெட் நிறுவனம் வெளியிடவில்லை.
