free website hit counter

பத்து வருடங்கள் வீட்டுக்குள் காதலியை மறைத்து வைத்த காதலன் !

வினோதம்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

காதல் பற்றிய பல அவதூறான செய்திகள் குற்றச்செய்திகளை அதிகமாகக் கையாளும் ஊடகங்களில் நிறைந்து கிடக்கும். ஆனால், காதலுக்கு எந்த தியாகத்தையும் செய்யத் தயாராக இருக்கும் முட்டாள்களைப் பற்றிய செய்திகள் அபூர்வம்.

இது ஒரு வித்தியாசமான காதல் கதை கேரளத்தில் நடந்துள்ளது. சொந்த வீட்டுக்குள்ளேயே, அப்பா, அம்மா மற்ற ரத்த சொந்தங்களின் கண்களில் படாமல் காதலியை ஒரு அறையில் மறைத்து வைத்து 10 ஆண்டுகள் குடும்பம் நடத்திய காதலன் பிடிப்பட்ட கதை இது.

கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம் அருகேயுள்ள கிராமம் அயிலூர். அந்த கிராமத்தை சேர்ந்த எலெக்ட்ரீசியன் தொழில் செய்து வருபவர் 34 வயது ரஹ்மான். இவருக்கு 24 வயதாக இருக்கும்போது தனது வீட்டருகே வசித்து வந்த 18 வயது சாஜிதாவை (தற்போது வயது 28) காதலித்து வந்துள்ளார். தங்களுடைய காதலை இருவருமே ரகசியமாக வைத்திருந்துள்ளனர். இந்நிலையில் கடந்த 10 வருடங்களுக்கு முன் சாஜிதா மாயமாகி உள்ளார். அது குறித்து சாஜிதாவின் பெற்றோர் கடந்த 2010-ஆம் வருடம் நெம்மாரா காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அப்போது ரஹ்மான் உள்பட அவரது குடும்ப உறுப்பினர்களிடம் போலீசார் சாஜிதா குறித்து ஏதாவது தெரியுமா எனக்கேட்டு விசாரணை நடத்தினர். அப்போது சாஜிதா குறித்து தெரியவில்லை எனக் கூறி உள்ளனர். ரஹ்மானோ ‘சஜிதாவா.. அவரைப் பார்த்தே ஒரு வருடம் இருக்குமே.. அந்தப் பொண்ணு யாருடைய கண்ணிலும் படாத அடக்கமான பெண்ணாயிற்றே..!” என்று பாராட்டிக் கூற, அப்போது போலீஸாருக்கு சந்தேகம் வரவில்லை.

ரகசிய வாழ்க்கை

இந்த நிலையில் சாஜிதாவை ரஹ்மான் கடந்த 10 ஆண்டுகளாக தனது சிறிய வீட்டில் மறைத்து வைத்து இருந்தது கோரோனாவால் வெளிச்சத்துக்கு வந்து உள்ளது. அதாவது, கடந்த 10 ஆண்டுகளாக தனது வீட்டு உறுப்பினர்களுக்குக் கூடத் தெரியாமல் வீட்டில் உள்ள ஒரு அறையில் வைத்து காதலி சாஜிதாவை பாதுகாத்து, அவருக்கு வேளா வேலைக்கு உணவு வழங்கி உள்ளார். அவர் பயன்படுத்திய உடைகளை வாங்கிச் சென்று வேலைக்குச் செல்லும் இடத்தில் துவைத்து காயவைத்து எடுத்து வந்து ரகசியமாகக் கொடுத்துவிடுவார். அதேபோல், அவருக்கு தேவையான நாப்கின் உள்ளிட்டவையும், உடல்நலம் சரியில்லாமல் போனா மாத்திரைகளையும் வாங்கி வந்து கொடுத்துள்ளார்.

சஜிதா ஒளிந்து வாழ்ந்த அந்தச் சிறிய அறையில் ஒரு சிறு ஜன்னல் இருந்ததுள்ளது. அனைவரும் தூங்கியபின் கம்பிகளை அகற்றி சஜிதா வெளியே வரலாம். சஜிதா கழிப்பறையைப் பயன்படுத்த இரவில் மட்டுமே வெளியே செல்வார்; அவர் கம்பிகளை அகற்றிவிட்டு ஜன்னலுக்கு வெளியே குதித்து வீட்டிற்கு வெளியே குளியலறைக்கு செல்வார். சஜிதாவின் அறைக்குள் சிறிய டிவி ஒன்றை வைத்து ஹெட்போன் வழியாக ஆடியோவை கேட்கும்படி வைத்திருந்திருக்கிறார். கடந்த பல வருடங்களாகவே ரஹ்மானிடத்தில் கண்ட சில ரகசிய மற்றும் விசித்திரமான நடத்தையால் அவருக்கு மனநல பிரச்சினைகள் இருக்கலாம் என தர்காவுக்கு அழைத்துச் சென்று மந்திரித்து அழைத்து வந்துள்ளனர். ஆனால், ரஹ்மானுக்குப் பிடித்திருந்தது காதல் நோய் என்பதும் ரஹ்மானிப் பிடித்திருந்த தேவதை சஜிதா என்பதும் வீட்டாருக்கு 10 ஆண்டுகள் தெரியாமல் போய்விட்டது. பிறகு எப்படித்தான் இவர்களுடைய ரகசியம் வெளியே வந்தது?

காட்டிக்கொடுத்த கொடுத்த கொரோனா

கொரோனா ஊரடங்கு காரணமாக ரஹ்மான் வேலைக்கு செல்ல முடியவில்லை. இதன் விளைவாக, அவர் வீட்டுக்கு பணம் கொடுக்க முடியவில்லை, இதனால், வேறு வழியின்றி வீட்டாரின் வற்புறுத்தலால் கடந்த மார்ச் மாதம் அவர் பாலகாட்டுக்கு குடிபெயர்ந்து அங்கே மாதச் சம்பளத்தில் ஒரு ஏஜென்ஸியில் வேலைக்குச் சேர வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. இதனால் வீட்டுக்குத் தெரியாமல் நடு இரவில் காதலியின் அறைக் கதவைத் திறந்து காதலி சஜிதாவை அழைத்துக்கொண்டு பாலகாடு சென்றுவிட்டார் ரஹ்மான். பின்னர், பாலக்காட்டில் உள்ள விதானசேரி கிராமத்தில் ஒரு சிறு வீட்டை வாடகைக்கு எடுத்து குடும்பம் நடத்தி வந்து உள்ளனர். நிலமைச் சரியானதும், ஒரு மாதம் கழித்து தான் பாலகாட்டுக்கு வேலைக்கு வந்திருப்பதாகச் சொல்லிக்கொள்ளலாம் என்று ரஹ்மான் வேலையில் கவனம் செலுத்தத் தொடங்கிவிட்டார்.

ஆனால், ரஹ்மான் குடும்பத்தினர் 2 நாட்கள் ஆகியும் அவர் வீட்டுக்கு வராததால், ‘ரஹ்மானைக் காணவில்லை’என போலீசில் புகார் அளித்தனர். 3 மாதம் ஆகியும் தகவல் இல்லை. இந்நிலையில் கடந்த ஜூன் 8 ஆம் தேதி, ரஹ்மானின் சகோதரர் அவரை பாலகாட்டின், நென்மாரா அருகே பார்த்து உள்ளார். உடனடியாக போலீஸ் உதவியுடன் ரஹ்மானைச் சந்தித்து உள்ளார். அப்போதுதான் இந்த காதல் ஜோடியின் அதிர்ச்சிக் கதை, வெளியுலகத்துக்கு வெளிச்சத்துக்கு வந்து உள்ளது. போலீசார் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிபதியிடம் ‘எங்களைப் பிரித்துவிடாதீர்கள். நாங்கள் ஒன்றாக வாழ விரும்புகிறோம்’ எனக் கூறினர். நிதிபதி அந்தப் பெண்ணிடம் ‘நீ கட்டாயப்படுத்தப்பட்டாயா?’ என்று கேள்வி எழுப்ப, ‘இல்லை நான் ரஹ்மானுடன் இருக்கவே விரும்புகிறேன்’ என்று கூறியதை அடுத்து அவருடன் செல்ல அனுமதிக்கப்பட்டார்.

காதலர்களின் வாக்குமூலம்

இந்த 10 ஆண்டுகள் தலைமறைவு வாழ்க்கை கூறித்து ரஹ்மான் கூறும்போது: “ சிறு வயதுமுதல் இரு வீட்டாருக்கும் தெரியாமல் காதலித்து வந்தோம்.. பத்து வருடங்களுக்கு முன், ஒரு நாள் சாஜிதா என்னிடம் வந்தார். அவரால் இனிமேல் தனது வீட்டில் தங்க முடியாது, திருமணம் பேசத் தொடங்கிவிட்டார்கள் எனக் கூறினார். எனக்கு வேறு வழியில்லை, அதனால் நான் என்னுடன் வரும்படி அவரிடம் கூறினேன். யாருக்கும் தெரியாமல் என் வீட்டில் அடைக்கலம் தந்தேன். நான் கொஞ்சம் பணம் சேமித்து சாஜிதாவுடன் வேறு எங்காவது சென்று வாழ வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் பணம் கிடைக்கவில்லை. அதனால் அவரை 10 ஆண்டுகள் பாதுகாக்க வேண்டி வந்துவிட்டது. ஆனால் வலியை அதிகம் சுமந்துகொண்டது சஜிதாதான்” எனக் கூறியிருக்கிறார். சஜிதா 10 ஆண்டுகள் மறைந்து வாழ்ந்தது பற்றிக் கூறும்போது.. “அவர் தனக்கு கிடைத்த உணவில் பாதியை எனக்குக் கொடுத்தார். அவர் என்னை நன்றாக கவனித்துக்கொண்டார். ஆனால் ஒரு அறையில் தங்குவது கடினம். பகலில் நான் ஹெட்செட் பயன்படுத்தி டிவி பார்த்து அறையில் சுற்றிக்கொண்டிருந்தேன். யாரும் இல்லாதபோது, நான் சில நேரங்களில் அறையிலிருந்து வெளியே வருவேன். இரவில், நான் வெளியே சென்று வந்து கொண்டிருந்தேன், ஆனால் பகல் நேரத்தில் நடமாட மாட்டேன். தலைவலிகளைத் தவிர நான் நோய்வாய்ப்படவில்லை. இனி மறைக்க வேண்டிய அவசியமில்லை. கரோனா காலம் எங்களுக்கு நன்மை செய்துவிட்டது” எனக் கூறியிருக்கிறார்.

ரஹ்மான் - சஜிதாவின் விசித்திரமான காதல் கதையில் பதிலளிக்கப்படாத பல கேள்விகள் இருக்கின்றன. ரஹ்மான் வீட்டில் சஜிதா இருப்பதை குடும்பம் எப்படி அறிந்திருக்கவில்லை என்பதில் தொடங்கி, ரஹ்மானும் சஜிதாவும் ஏன் வெளிப்படையாக வாழ இவ்வளவு காலம் காத்திருந்தார்கள் என்பது உடபட சமூகம் இந்த காதலர்களிடமிருந்து கற்றுக்கொள்ளவும் கைவிடவும் நிறைய விஷயங்கள் இருக்கின்றன என்பதுமட்டும் நிச்சயம்.

-4தமிழ்மீடியாவுக்காக: மாதுமை

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction