டுவிட்டர் சமூகவலைத்தளத்தின் நாம சின்னமாக இருந்துவந்த நீலக்குருவியை சுதந்திரமாக பறக்க விட்டுவிட்டார் எலோன் மஸ்க்.
இனி 'X' எனும் நாமச்சின்னமே டுவிட்டரின் அடையாளமாக இந்தவாரம் முதல் செயல்பட்டு வருகிறது.
டுவிட்டர் நிர்வாகம் எலோன் மஸ்க் கைக்கு வந்ததிலிருந்து பல்வேறு புதிய திட்டங்களை அறிமுகபடுத்திவந்தார். இந்நிலையில் டுவிட்டரின் பெயரை X என மாற்றுவதாக அவர் அண்மையில் அறிவித்திருந்தார். இதனையடுத்து திங்கட்கிழமை முதல் கருப்பு பின்னணியில் எளிய வெள்ளை நிற X வடிவ புதிய நாமச்சின்னம்; டுவிட்டர் வலைத்தளத்தில் மாற்றம் பெற்றது.
'X' என்பதை "அனைத்து வித செயலியாக" உருவாக்க விரும்புவதாகக் அவர் கூறியுள்ளதுடன் இது தகவல்தொடர்பு முதல் பணம் செலுத்துதல் மற்றும் ஷாப்பிங் வரை அனைத்திற்கும் பயன்படுத்தப்படலாம் எனவும்; X ஐ இன்னும் திறந்த மற்றும் சுதந்திரமான பேச்சு மேடையாக மாற்ற விரும்புவதாகவும் அவர் கூறியுள்ளார். இதைத்தவிர "அறியப்படாத ஆற்றலுக்கான உலகளாவிய சின்னம்" என்பதால் தான் X என்ற பெயரைத் தேர்ந்தெடுத்ததாக மஸ்க் மேலும் கூறியுள்ளார்.
இந்த மாற்றம் குறித்து டுவிட்டர் பயனாளர்களே நேர்மறை மற்றும் எதிர்மறை கருத்துக்களை வழங்கிவருகின்றனர். சில பயனர்கள் மஸ்கின் லட்சியத்திற்காக அவரைப் பாராட்டினர். எளிய X வடிவச்சின்னத்தை வரவேற்கவும் செய்தனர். மற்றவர்கள் X மிகவும் கட்டுப்பாடற்ற தளமாக மாறும் சாத்தியம் குறித்து கவலை தெரிவித்தனர். மேலும் பல்வேறு கேலி விமர்சனப்படங்களையும் பதிவுசெய்தனர்.
எனினும் டுவிட்டர் சமூகவலைத்தளம் ஆரம்பிக்கப்பட்ட 2006ஆம் ஆண்டுமுதல் பயன்படுத்தப்பட்டு வந்த பழைய நீல பறவை சின்னத்தின் மீது சிலரின் ஏக்கம் இன்னும் இருக்கலாம். மொத்தத்தில், பெயர் மாற்றம் டுவிட்டருக்கு ஆபத்தான நடவடிக்கையாக இருப்பினும், பல சாத்தியமான நன்மைகளும் உள்ளன என்கிறார்கள். டுவிட்டரின் பயனர்கள்; இந்த மாற்றத்திற்கு எவ்வாறு பிரதிபலிக்கிறார்கள்? மற்றும் அதன் இலக்குகளை அடைய தளம் உதவுகிறதா? என்பதை பொருத்திருந்துதான் காணவேண்டும்.