free website hit counter

மூலிகை அறிவோம் - வேப்பிலையாம் கறிவேப்பிலை காய்கறிக்கெல்லாம் தாய்ப்பிள்ளை

மருத்துவம்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

கருவிழிப் பார்வைக்கு கரு கரு கேசத்திற்கு கண் கண்ட மூலிகை இக் கறிவேப்பிலை தான்.

 தாவரவியல் பெயர்- Murraya keonigii
 குடும்பப் பெயர்- Rutaceae
 ஆங்கிலப் பெயர்- Curry-leaf tree
 சிங்களப் பெயர்- கறபிஞ்சா, கறிபிஞ்சா
 சமஸ்கிருதப் பெயர்- சுரபி, சுரபினிம்பா
 வேறு பெயர்கள்- கருவேப்பிலை, கறியபிலை, கறி வேம்பு, காட்டு வேப்பிலை

 பயன்படும் பகுதி-  இலை, ஈர்க்கு, பட்டை, வேர்

 சுவை-  சிறு கார்ப்பு
 வீரியம்- வெப்பம்
 விபாகம்- கார்ப்பு

 வேதியியற் சத்துக்கள்-
Carbozole alkaloids
Coumarin glucoside
Scopolin
Beta-carotene

அதிக சூட்டில் மேற்கூறப்பட்ட வேதியியற் சத்துக்கள் அழிந்துவிடுவதனால் கறிவேப்பிலையை பச்சையாக சாப்பிடுவதே அதிக நன்மை பயக்கக் கூடியதாகும்.

 மருத்துவச் செய்கைகள்-
Antidysenteric-கழிச்சலடக்கி
Antifungal-பங்கசு எதிரி
Antiinflammatory- தாபிதமகற்றி
Antioxidant- ஒட்சியேற்ற எதிரி
Antispasmodic- இசிவகற்றி
Hypoglycemic - குருதி குளுக்கோசு அளவை குறைத்தல்
Stomachic-பசித்தீ தூண்டி
Tonic- உரமாக்கி

 தீரும் நோய்கள்-
சுவையின்மை,  வயிற்றுளைவு, பழஞ்சுரம், பித்தவாந்தி, பைத்தியம்,
மந்தம், மந்தபேதி, அசீரணபேதி, மலதோடம், மலக்கட்டு, கிரகணி, கொனோரியா, முடி உதிர்வு

 பயன்படுத்தும் முறைகள்-
இதன் இலையிலுள்ள ஒருவித நறுமணம் காரணமாக
பாரம்பரிய சமையலில் தாளிதமாக சேர்த்துக் கொள்ளப்படுகின்றது.

இலையை நிழலில் உலர்த்தி அதனுடன் மிளகு, உப்பு, சீரகம்,  சுக்கு ஆகியவற்றை பொடியாக்கிச் சோற்றில் சேர்த்து கொஞ்சம் நெய் விட்டு கலந்துண்ண மந்தம், மந்தபேதி, மலதோடம், மலக்கட்டு, கிரகணி, கொனோரியா இவை குணமாகும்.

இலையுடன் சுட்ட புளி, வறுத்த உப்பு,  வறுத்த மிளகாய் சேர்த்து துவையல் செய்து உணவுடன் வயிற்றோட்டம், வயிற்றுளைச்சல், உணவில் விருப்பமின்மை, பித்த வாந்தி, செரியாமை ஆகியவை நீங்கும்.

ஈர்க்கை முலைப்பால் விட்டரைத்து சாறு எடுத்து கிராம்பு, திப்பிலி சேர்த்து 2,3 தரம் குழந்தைகளுக்கு கொடுக்க வாந்தி நிற்கும்; பசி உண்டாகும்.

அரிசியுடன் இலையை சேர்த்து உரலிலிட்டுக் குத்தித் தேய்த்துப் புடைத்து விட்டு அவ்வரிசியுடன் ஒரு பழுத்துலர்ந்த மிளகாய் கூட்டிக் கருக்கி சாந்து நிறம் வரும் பக்குவத்தில் வசம்பு சாம்பல்,  சிறுநாகப் பூ, அதிவிடயம் இவைகளைச் சேர்த்து நீர்விட்டு சுண்டக் காய்ச்சிக் கொடுக்க அசீரணபேதி நீங்கும்.

இதன் ஈர்க்குடன் வேம்பின் ஈர்க்கு , நெல்லி ஈர்க்கு சேர்த்து இடித்து நீர் விட்டுக் காய்ச்சிக் கொடுக்க வாந்தி உடனே நிற்கும்.

இதன் இலைகள் சிறிதுடன் வயதுக்குத்தக்கபடி 1,3 மிளகும் சேர்த்து நெய்யில் வறுத்தி வெந்நீர் விட்டு அரைத்துக் கரைத்து பாலர்களுக்கு நீராட்டியபின் கொடுக்க மந்தம் முதலியன நீங்கிப் பசியை உண்டு பண்ணும்.

முடி உதிர்தலைத் தடுக்க கறிவேப்பிலையை பொடி செய்து தினமும் சோற்றில் கலந்து சாப்பிடலாம். கரிசாலை, நெல்லி, கீழாநெல்லி,  அவுரி இவற்றுடன் சமபங்கு கறிவேப்பிலைச் சாறு எடுத்து தேங்காய் எண்ணெயுடன் சேர்த்துக் காய்ச்சி தலைமுடித் தைலமாக பயன்படுத்தலாம்.

Anti-oxidant ஆக தொழிற்படுவதனால் தோல் சுருக்கம், உடல் சோர்வு, மூட்டு தேய்தல், நரை இன்றி என்றும் இளமையாக உடலை வைத்திருக்கும். மேலும் கலப் பிறழ்வால் உருவாகும் புற்றுநோயையும் தடுக்க வல்லது.

அழகிய வாழ்வை ஆரோக்கியமாக வாழவிடாமல் நமை வதைக்கும் வாழ்வியல் நோய்களின் பிடியிலிருந்து கடைகளில் கொசுறாகவே கிடைக்கும் கறிவேப்பிலை நமை காக்கும் செயலானது எத்தகைய வியப்புக்குரியது. தினமுண்ணும் உணவில் மணத்திற்கு மட்டுமன்றி நலத்திற்காகவும் சேர்த்துண்போம்.

 ~சூர்யநிலா

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula