free website hit counter

நாம் தனிமையில் இல்லை..! -பாகம் -1 (We are Not Alone..Part-1) - மீள்பதிவு

அறிவியல்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

நாம் தனிமையில் இல்லை..! -பாகம் -1 (We are Not Alone..Part-1) - மீள்பதிவு

எமது பிரபஞ்சத்தில் உள்ள கோடானு கோடி அண்டங்களிலுள்ள நட்சத்திரத் தொகுதிகள் மற்றும் அவற்றைச் சுற்றி வரும் கிரகங்களில், பால்வெளி அண்டத்தில் இருக்கும் (Milkyway Galaxy) சூரிய குடும்பத்தில்,

நடுத்தர நட்சத்திரமான சூரியனைச் சுற்றி வரும் 9 கிரகங்களில் பூமி என்ற உயிர் வாழ்க்கைக்கு அவசியமான சூழலியல் கூறுகளைக் கொண்ட நீல வண்ணத்தில் ஜொலிக்கும் கிரகத்தில் மனிதர்களாகிய நாமும், இதுவரை இங்கு அறியப் பட்ட மில்லியன் கணக்கான உயிரினங்களும் வாழ்கின்றோம்.

பொதுப்படையான அறிவுடன் (Common Sense) நோக்கினாலே இத்தனை டிரில்லியன் கணக்கான அண்டங்களிலும், அவற்றில் சராசரியாக இருக்கக் கூடிய பில்லியன் கணக்கான நட்சத்திரங்களிலும் எத்தனை எண்ணற்ற கிரகங்கள் சுற்றி வர முடியும் என்று கணிப்பிட்டுப் பார்க்க முடியும். அவ்வாறு நோக்குகையில், நிச்சயம் எமது பூமியில் மட்டும் தான் உயிரினங்கள் உள்ளன என அறுதியாக வாதிடுவது அத்தனை பொருத்தமாக இருக்காது. யதார்த்தம் என்னவென்றால், பூமியில் இருந்து மிக அண்மையில் பால்வெளி அண்டத்தில் இருக்கும் நட்சத்திரத் தொகுதியான ப்ராக்ஸிமா செண்டூரிக்கு பிரபஞ்சத்தின் அதிக பட்ச வேகமான ஒளியின் வேகத்தில் செல்வது என்றாலே 4 ஆண்டுகள் எடுக்கும்.

எனவே சூரிய குடும்பம் தவிர்த்து சராசரியாக 100 பில்லியன் நட்சத்திரங்களைக் கொண்டிருக்கும் எமது பால்வெளி அண்டத்துக்கும், நாம் எமது பூமியில் உள்ள அனைத்து வகை அதிதிறன் தொலைக் காட்டிகள் மூலமும் அதிகபட்சம் அவதானிக்கக் கூடிய எமது கண்ணுக்குப் புலப்படும் பிரபஞ்சத்தின் (Observable Universe) பல டிரில்லியன் கணக்கான அண்டத் தொகுதிகளுக்கும் (Super Clusters) பூமியில் இருந்து பயணம் செய்து உயிரினங்களைக் கண்டறிவதற்கான தொழிநுட்பம் நவீன அறிவியலில் கூட கற்பனையில் தான் உள்ளது.

ஆனால் எமது சூரிய குடும்பத்துக்குள்ளே இருக்கும் ஏனைய 9 கிரகங்களுக்கும் 20 ஆம் நூற்றாண்டின் கடைசிப் பகுதியில் செய்மதிகளை அனுப்பியுள்ள மனிதன் ஒரு சில கிரகங்கள் மற்றும் துணைக் கிரகங்களில் நுண்ணுயிர் அல்லது வேறு வடிவிலான உயிரினங்கள் வாழும் சாத்தியக் கூறையும் அறிந்துள்ளான். ஆனால் இதுவரை மனிதனைப் போன்ற ஒரு அறிவார்ந்த உயிரினத்தை அறியவோ, தொடர்புகளை மேற்கொள்ளவோ அவனால் இயலவில்லை என்பது தான் நாம் அறிந்துள்ள விடயம். யதார்த்தமாக சிந்தித்தால் சில ஏலியன்கள் தொடர்பான ஆவணங்கள் மற்றும் பறக்கும் மர்மப் பொருட்கள் குறித்துப் பல தகவல்கள் மற்றும் வீடியோக்கள் வெளி வந்துள்ளன. மேலும் இவை தொடர்பில் வல்லரசு நாடுகள் சில இராணுவ இரகசியங்களையும் வைத்திருக்கக் கூடும்.

ஆனால் இவை தொடர்பில் ஆராய்வதோ அல்லது சமய நம்பிக்கை அடிப்படையிலான கடவுள்களின் இருப்பிடங்கள் தொடர்பில் ஆராய்வதோ இக்கட்டுரையின் நோக்கமல்ல. அறிவியல் ரீதியாக விண்வெளியில் சூரிய குடும்பம் மற்றும் தொலைக் காட்டிகளால் அவதானிக்கப் படும் ஏனைய நட்சத்திரங்களை சுற்றி வரும் கிரகங்கள் அல்லது விண்கற்களில் உயிரினங்களது இருப்பு எந்தளவு அறியப் பட்டுள்ளது? மற்றும் அவற்றுடன் தொடர்புகளை ஏற்படுத்தும் சாத்தியம் மற்றும் விண் இடைப் பயணங்கள் தொடர்பான சாத்தியம் போன்றவை குறித்து மட்டுமே இதில் ஆராயப் படுகின்றது.

Starshade Model

அமெரிக்கப் பல்கலைக் கழகமான MIT இல் வான் பௌதிகவியலாளராகச் (Astro Physicist) செயலாற்றி வரும் சாரா சீகர் கையில் வைத்திருக்கும் இம்மாடலானது கலிபோர்னியாவின் பசடெனாவிலுள்ள ஜெட் உந்துவிசைக் கருவி ஆய்வு கூடத்தில் தயாரிப்பில் இருந்து வரும் ஸ்டார்ஷேட் (Starshade) என்ற நவீன செய்மதியினுடையதாகும். இந்த விண்கலம் விண்ணில் ஏவப்படும் பட்சத்தில் இதன் இதழ்களது விட்டம் 100 மீட்டர்களுக்கும் அதிகமாக இருக்கும். இந்த இதழ்களானது விரிந்திருக்கும் போது சுற்றியிருக்கும் நட்சத்திரங்களில் இருந்து வரும் ஒளி மறைக்கப் படுவதால் ஒரு விண் தொலைக் காட்டியால் குறிப்பிட்ட ஒரு நட்சத்திரத்தை சுற்றி வரும் கிரகத்தைத் தெளிவாகப் படம் பிடிக்க முடியும்.

Starshade Satellite

இதன் மூலம் அக்கிரகத்தில் உயிர்வாழ்க்கை இருப்பதற்கான ஆதாரத்தை திருத்தமாக சேமிக்க முடியும். Exoplanets என ஆங்கிலத்தில் அழைக்கப் படும் வெளிப்புற கிரகங்கள் அதாவது சூரிய குடும்பம் தவிர்ந்த ஏனைய நட்சத்திரங்களைச் சுற்றி வரும் கிரகங்கள் தொடர்பான ஆய்வில் சாரா சீகர் நிபுணத்துவம் பெற்றவர் ஆவார்.

இவர் தனது ஆய்வு குறித்து விளக்கும் போது இன்று மனிதன் ஆராய்ந்து வரும் வெளிப்புற கிரகங்களில் எந்தளவு எரிமலை வெடிப்பு அல்லது லாவாவின் செயல் திறன் உள்ளது? அதன் பிரகாசம் எந்தளவில் உள்ளது என்பது தொடர்பில் விபரங்களைப் பெறுவது அவசியம் என்கின்றார். பொதுவாக பூமி உட்பட எந்தவொரு கிரகத்திலும் எரிமலை செயற்பாடானது உயிர் வாழ்க்கைக்கான மிக அடிப்படையான அறிகுறிகளில் ஒன்றாகும். 1990 ஆமாண்டு இவர் பட்டப் படிப்பைத் தொடங்குகையில், அப்போது இருந்த விண்வெளித் தொழிநுட்பத்தில் சில மணித்தியாலங்களுக்குள் ஒரு நட்சத்திரத்தைச் சுற்றி வந்து விடும் கிரகங்கள், ஒரு நட்சத்திரத்தைச் சுற்றி வர மில்லியன் வருடங்கள் எடுக்கக் கூடிய கிரகங்கள் அல்லது இரு நட்சத்திரங்களைச் சுற்றி வரும் கிரகங்கள் அல்லது எந்தவொரு நட்சத்திரத்தையும் சுற்றி வராத கிரகங்கள் போன்றவை குறித்து நாம் அறிந்திருக்கவில்லை.

1995 ஆமாண்டு தான் முதல் Exoplanet அதாவது வெளிப்புறக் கிரகமான 51 Pagasi b அறியப் பட்டது. அப்போது அது அனைவருக்கும் பெரும் ஆச்சரியத்தை அளித்தது. இதற்கான காரணங்களில் ஒன்று அது வெறும் 4 நாட்களில் தனது நட்சத்திரத்தைச் சுற்றி வந்து விடுகின்றது. இன்று எமக்கு சுமார் 4000 வெளிப்புறக் கிரகங்கள் குறித்து உறுதியாகத் தெரியும். இவற்றில் பெரும்பாலான வெளிப்புறக் கிரகங்கள் 2009 ஆமாண்டு விண்ணில் ஏவப்பட்ட கெப்ளர் தொலைக் காட்டியால் கண்டுபிடிக்கப் பட்டவை ஆகும்.

இந்த கெப்ளர் தொலைக் காட்டியின் செயற்திட்டம் சுமார் 150 000 நட்சத்திரங்களை உற்று நோக்கி, அவற்றை எத்தனை வெளிப்புறக் கிரகங்கள் சுற்றி வருகின்றன? இவற்றில் எத்தனை கிரகங்கள் உயிர் வாழ்க்கைக்கான ஆதாரத்தைக் கொண்டுள்ளன என்பது குறித்து அறிவதாகும்...

இதன் தொடர்ச்சியை அடுத்த வாரமும் எதிர்பாருங்கள்..

 

நன்றி, தகவல் - நேஷனல் ஜியோகிராபிக் சஞ்சிகை

- 4தமிழ்மீடியாவுக்காக நவன்

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction