free website hit counter

நாம் தனிமையில் இல்லை..! - பாகம் - 2 (We are Not Alone..Part-2) - மீள்பதிவு

அறிவியல்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

முன்னைய பாகத்தில் நாம் 2009 ஆமாண்டு விண்ணில் ஏவப்பட்ட கெப்ளர் தொலைக் காட்டியினால் அவதானிக்கப் பட்ட வெளிப்புறக் கிரகங்கள் தொடர்பான அறிமுகத்தைப் பார்த்தோம். அதன் தொடர்ச்சி இனி.. (முகப்புப் படம் - கெப்ளர் தொலைக் காட்டி)

நாம் தனிமையில் இல்லை..! -பாகம் -1 (We are Not Alone..Part-1) - மீள்பதிவு

கெப்ளர் தொலைக் காட்டியின் மூலம் நம்மால் அவதானிக்கப் பட்ட விபரம் யாதெனில், நாம் வாழும் பிரபஞ்சத்தில் எந்தளவு நட்சத்திரங்கள் உள்ளனவோ அதை விட அதிக கிரகங்கள் உள்ளன என்பதாகும். மேலும் இந்த நட்சத்திரங்களைச் சுற்றி வரும் கிரகங்களில், உயிர் வாழ்க்கைக்குத் தகுந்த சூழலியல் கூறுகளைக் (Habitable Zone) கொண்ட பூமிக்கு ஒப்பான கிரகங்கள் குறைந்தது 1/4 பங்காவது இருக்க வேண்டும்.

பால்வெளி அண்டம்

இந்த சூழலியல் கூறுகளில் அதிக வெப்பமோ அல்லது அதிக குளிரோ நிலவாத சமநிலைப் பருவ நிலை குறித்த கிரகங்களில் நிலவ வேண்டும். நாம் வாழும் சூரிய குடும்பம் அடங்கியிருக்கும் பால்வெளி அண்டத்தில் மாத்திரம் 100 பில்லியன் நட்சத்திரங்கள் காணப் படுகின்றன. இப்படிப் பார்த்தால் எமது அண்டத்தில் மாத்திரம் சுமார் 25 பில்லியன் இடங்களில் உயிர் வாழ்க்கை இருக்க வேண்டும். இன்னொரு விடயம் எமது பால்வெளி அண்டம் இப்பிரபஞ்சத்தில் அடங்கியிருக்கும் டிரில்லியன் கணக்கான அண்டங்களில் ஒன்றாகும் என்பதாகும்.

ஒரு சிறிய ஒப்புவமைக்கு, எமது பூமியின் அனைத்து கடற்கரைகளிலும் காணப்படும் மணல் துணிக்கைகளை விட அதிக நட்சத்திரங்கள் எமது பிரபஞ்சத்தில் காணப் படுகின்றதாம். 2018 ஆமாண்டு ஆக்டோபரில் வெளிப்புறக் கிரகங்கள் தொடர்பில் முக்கிய ஆய்வுகளை செய்து வந்த கெப்ளர் தொலைக் காட்டியின் எரிபொருள் தீர்ந்து அதன் செயற்பாடு பெரும்பாலும் முடிவுக்கு வந்திருந்தது.

நிக்கோலஸ் கொப்பர்னிக்கஸ்

வானியல் அறிவியலில், 15 ஆம் நூற்றாண்டில் தான் அறிவியலாளர் கோப்பர்நிக்கஸ் சூரியனே மையம் என்றும், பூமி உட்பட கிரகங்கள் அதனைச் சுற்றி வருகின்றன என்றும் பல நூற்றாண்டுகள் நீடித்த புவி மைய மயக்கத்தை நீக்கி மிகப் பெரும் புரட்சியை ஏற்படுத்தியிருந்தார். இவரது கொள்கைகளால் ஈர்க்கப் பட்டு கோள்களின் ஒழுக்கை திருத்தமாக நீள்வட்டப் பாதை என்று கணித ரீதியாக நிரூபித்தது மட்டுமல்லாது இது தொடர்பான 3 விதிகளையும் கூட அறிவித்த 16 ஆம் நூற்றாண்டு வானியலாளர் தான் ஜோஹன்னாஸ் கெப்லர்.

கெப்ளரின் அறிவியல் தாக்கம் தான் மனித சமுதாயத்தில் பிரபஞ்ச படைப்பு தொடர்பான மர்மங்களை எவ்வாறு அணுகுவது என்ற விதத்தையே மாற்றியமைத்தது மட்டுமல்லாது பூமி தவிர்ந்த ஏனைய இடங்களில் உயிரினங்கள் இருக்கலாம் என்ற ஊக்கத்தையும் ஏற்படுத்தியது. ஆனால் நவீன காலத்திலும் சவாலாக இருப்பது இரு விடயங்கள்.. ஒன்று இந்த உயிரினங்களை எவ்வாறு கண்டுபிடிப்பது? மற்றது அவற்றுடன் எவ்வாறு தொடர்பினை ஏற்படுத்துவது?

சமீப காலமாக அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு நிறுவனம், வான் உயிரியலில் அதிக கவனம் செலுத்தத் தொடங்கியிருப்பதுடன் வெளிப்புறக் கிரகங்களில் உயிர் வாழ்க்கை தொடர்பான மீளாய்வையும் வலுப்படுத்தி வருகின்றது. இதற்காகப் புதிய இலக்குகள் மற்றும் புதிய நிதி ஒதுக்கீடு மற்றும் அதி நவீன கணிணிப் பயன்பாடு போன்றவற்றையும் பயன்படுத்தி எம்மைப் போன்ற அறிவு கூர்ந்த ஏலியன்கள் உள்ளனவா என்றும் ஆராயத் தொடங்கியுள்ளது. (SETI என்றழைக்கப் படும் இத்திட்டம் தொடர்பில் அடுத்த கட்டுரையில் பார்ப்போம்..)

TESS தொலைக் காட்டி

வான் பௌதிகவியலாளரான சாரா சீகர் தற்போது கவனம் செலுத்தி வருவது 2018 விண்ணில் வெளிப்புறக் கிரகங்களை ஆராய்வதற்காக ஏவப்பட்ட TESS எனப்படும் செய்மதியின் செயற் திட்டத்திலாகும். ஒரு நட்சத்திரத்தைக் கடந்து கிரகம் செல்லும் போது அதன் பிரகாசத்தில் ஏற்படும் மந்தத்தை அளப்பதன் மூலம் எந்தெந்த இடங்களில் வெளிப்புறக் கிரகங்கள் இருக்கும் என்பதை இது கண்டுபிடிக்கும்.

James Webb Space Telescope

 

2021 ஆமாண்டு நாசா விண்ணில் செலுத்தத் திட்டமிட்டிருக்கும் மிகவும் அவதான ஆற்றல் திறன் மிக்க ஜேம்ஸ் வெப் விண் தொலைக் காட்டியானது (James Webb Space Telescope) இந்த TESS தொலைக் காட்டி கண்டு பிடிக்கும் என எதிர்பார்க்கப் படும் குறைந்தது பூமியைப் போன்ற பாறைகளாலான மேற்பரப்பைக் கொண்ட 50 வெளிப்புறக் கிரகங்களை அடையாளம் காண்பதாகும்.

டெக்ஸாஸ் மாநிலத்தின் ஹௌஸ்டன் நகரில் உள்ள பாரிய கிரியோஜெனிக் அறையில் தயாராகி வரும் ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ் தொலைக் காட்டி, தற்போது விண்ணில் செயற்பட்டு வரும் ஹபிள் தொலைக்காட்டியை விட மிக அதிகளவு வினைத் திறன் மிக்கதாகும். இந்த ஜேம்ஸ் வெப் தொலைக்காட்டியால் உயிர் வாழ்க்கைக்கு ஆதரவளிக்கக் கூடிய நட்சத்திரங்கள், அண்டங்கள், சூரிய குடும்பத்துக்கு இணையான அமைப்புக்கள் போன்றவற்றை கண்டுபிடிக்க முடியும்.

இயல்பிலேயே இரசாயனவியல் துறையிலும் ஆர்வம் கொண்ட சீகர் பூமியில் எந்தெந்த மூலகங்கள் எந்தெந்த அலைநீளம் கொண்ட ஒளிக் கதிர்களை உறிஞ்சும் அல்லது வெளிவிடும் போன்ற தகவல்களைத் திரட்டி தனது வீட்டில் போஸ்டராக ஒட்டி வைத்துள்ளார். தனது இந்த ஆய்வின் மூலம் இவர் என்ன கூறுகின்றார் என்றால், 'உயிர் வாழ்க்கைக்கு உதவக்கூடிய ஒரு சூழலைக் கொண்டுள்ள கிரகம் தன்னைத் தாண்டிச் செல்லும் நட்சத்திர ஒளியில் குறிப்பிட்ட ஒரு அடையாளத்தை (Finger prints) ஏற்படுத்தி விடும்.. இந்த அடையாளம் மூலம் கொள்கை அடிப்படையில், உயிர் வாழும் மிருகங்களைக் கொண்ட ஒரு கிரகத்தை அக்கிரகத்தின் சூழலில் இருந்து வெளிவரும் ஒளியில் இருந்து அடையாளம் கண்டு கொள்ளலாம்.' என்பது ஆகும்.

ஆனால் இது மிகவும் கடினமானது. (இதன் தொடர்ச்சியை அடுத்த வாரமும் எதிர்பாருங்கள்..)

நன்றி தகவல், நேஷனல் ஜியோகிராபிக் சஞ்சிகை

- 4தமிழ்மீடியாவுக்காக நவன்

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction