free website hit counter

நாம் தனிமையில் இல்லை..! : பாகம் - 11 (We are Not Alone - Part 11)

அறிவியல்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

கடந்த தொடரில் Starshot விண்வெளிப் பயண செயற்திட்டம் தொடர்பான விரிவான தகவல்களைப் பார்த்தோம். அதன் தொடர்ச்சி இனி..

முந்தைய தொடருக்கான இணைப்பு -

மனித நாகரிக வராலாற்றில் அவனது புதிய இடங்களுக்கான தேடலும், அடைதலும் ஒவ்வொரு கட்டத்திலும் ஒரு படி முன்னேறியே வருகின்றது. ஆப்பிரிக்க கண்டத்துக்கு வெளியே பயணித்தது, சமுத்திரங்களைக் கடந்தது, அமெரிக்கா போன்ற தேசங்களைக் கண்டு பிடித்து குடியேறியது, மற்றும் பூமியின் துணைக் கோளான நிலவில் கால் பதித்தது என்பவையே அப்படிகளாகும்.

இதில் அப்போலோ 11 விண்கலம் மூலம் நிலவில் கால் பதித்ததில் இருந்து தான் நாம் வேறு கிரகங்கள், வால் வெள்ளிகள் மற்றும் நீண்ட தூர விண்வெளிப் பயணங்களுக்கான இலக்குகளை நிர்ணயித்து அவற்றில் வெற்றியும் கண்டு வருகின்றோம். ஆனால் இப்போது இருக்கும் ராக்கெட்டு உந்துவிசை (Rocket Propulsion) தொழிநுட்பம் மூலம் எமக்கு அருகே இருக்கும் நட்சத்திரத் தொகுதியான அல்பா செண்டூரிக்கு பயணிப்பதானால் அதற்கு 10 இலிருந்து 100 ஆயிரம் வருடங்கள் வரை எமக்குத் தேவைப் படும். இதற்கான மாற்று தான் லேசர் கற்றைகள் மூலம் உந்தப் படும் Starshot செயற்திட்டத்தின் விண்கலங்கள் ஆகும்.

Nanocraft

அல்பா செண்டூரி நட்சத்திரத் தொகுதியிலுள்ள Proxima b என்ற பூமிக்கு ஒப்பான கிரகத்தை நோக்கி செலுத்தப் படவுள்ள இந்த ஒவ்வொரு விண்கலமும் Nanocraft அல்லது StarChip உம் தபால் முத்திரை அளவே இருக்கும். ஆனால் இதில் கமெராக்கள், உந்து கருவிகள், நேவிகேஷன் மற்றும் தகவல் தொடர்பு கருவிகள் என அனைத்தும் கட்டமைக்கப் பட்டிருக்கும். விண்வெளியில் இது எரிபொருளுக்குப் பதிலாக லேசர் கற்றைகளால் உந்தப் படும். இந்த உந்தத்தைப் பெறுவதற்காக ஒவ்வொரு Nanocraft இலும் 1 மீட்டர் விட்டமுடையை மிக மிக மெல்லிய லேசர் பாய்மரம் (Laser sail) பொருத்தப் பட்டிருக்கும்.

சுமார் 100 பில்லியன் வாட் கொண்ட லேசர் கற்றைகள் பூமியின் தரையில் இருந்து இந்த நேனோகிராஃப்ட்கள் மீது செலுத்தப் படும். இதன் மூலம் ஒளியின் வேகத்தில் சுமார் 20% வீத வேகத்துடன் இந்த நேனோகிராப்ட்டுகள் 4 ஒளியாண்டுகள் தூரத்தில் இருக்கும் Proxima b இனை, 20 ஆண்டுகளில் சென்றடைந்து விடும். அங்கு சென்றடைந்த பின் அக்கிரகங்களின் சுற்றுச் சூழலைப் படம் பிடித்து லேசர் கதிர் ஊடாகவே பூமிக்கு இந்த நேனோகிராஃப்ட் அனுப்பும் புகைப் படங்கள் 4 ஆண்டுகளில் எம்மை வந்தடைந்து விடும்.

ஒளியின் வேகத்தில் மிகச் சிறியளவு வேகத்தில் பயணித்தாலே விண்வெளியில் இந்த நேனோகிராப்ட்டுகளின் பயணம் மிகவும் சவால் மிக்கதாகும். ஒரு சிறிய விண்வெளித் தூசு இதில் மோதினாலே பெரும் சேதம் ஏற்படும். ஆனால் எமது விண்வெளி பெரும்பாலும் 90% வீதம் வெற்றிடம் என்பதால் இதற்கான சாத்தியங்கள் மிகக் குறைவு என்றே கருதப் படுகின்றது. இந்த செயற்திட்டம் மிகவும் சிக்கலானது என்பதுடன் இதற்கான செலவு பல பில்லியன் டாலர்கள் அளவில் இருக்கும் என்பதாலும் இப்போதைக்கு இதனை மேற்கொள்ளும் திட்டம் நாசாவுக்கு இல்லை. ஆனால் இன்னும் சில தசாப்தங்களில் இது தயாராகி விடும் என்று கூறப்படுகின்றது.

சுமார் 25 டிரில்லியன் மைல்கள் அல்லது 4.37 ஒளியாண்டுகள் தொலைவில் இருக்கும் ஆல்பா செண்டூரி நட்சத்திரத் தொகுதி தான் பூமிக்கு மிக அருகே இருக்கும் இன்னொரு நட்சத்திரத் தொகுதியாகும். அதனால் தான் இதனைப் பயண இலக்காக எடுத்துள்ளனர். இந்த நட்சத்திரத் தொகுதி 3 நட்சத்திரங்களால் ஆனது. இதில் ப்ரொக்ஸிமா செண்டூரி என்ற நட்சத்திரம் தான் பூமிக்கு மிக அருகே 4.24 ஒளியாண்டு தொலைவில் உள்ளது. ஆனால் ஏனைய இரு A மற்றும் B என்று குறிப்பிடப் படும் நட்சத்திரங்கள் எமது சூரியனைப் போன்றவை. இவை ஒன்றை இன்னொன்று 80 வருடங்களுக்கு ஒரு முறை சுற்றி வருகின்றன. மேலும் இவ்விரு நட்சத்திரங்களும் மனிதர்களுக்கு விஞ்ஞான ரீதியாக மிகவும் முக்கியத்துவமானவை ஆகும்.

இதில் ஆல்பா செண்டூரி B நட்சத்திரத்தை சுற்றி வரும் கிரகமொன்று பாறைகளால் ஆனது என்றும் பூமிக்கு இணையான கூறுகளைக் கொண்டிருக்கும் என்று 2012 ஆமாண்டு விஞ்ஞானிகளால் அறிவிக்கப் பட்டது. ஆனால் அதற்கான ஆதாரத்தைப் பெற முடியவில்லை. நீங்கள் பூமியின் தென்னரைக் கோளத்தில் வசிப்பவர் என்றால் தொலைக் காட்டி இன்றியே நீல வண்ணத்தில் ஒளிக்கும் ஆல்பா செண்டூரி நட்சத்திரத்தை தென்சிலுவை நட்சத்திரத் தொகுதிக்கு அடுத்ததாக வெறும் கண்ணால் வானில் பார்க்க முடியும்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula