2030 ஆமாண்டு சர்வதேச விண்வெளி நிலையத்தை பாதுகாப்பாக பூமியில் வீழ்த்தும் பொறுப்பை ஏற்றது Space X நிறுவனம்
1998 ஆமாண்டு விண்ணில் தாழ்ந்த சுற்று வட்டப் பாதையில் நிறுத்தப் பட்டு 92 நிமிடங்களுக்கு ஒருமுறை பூமியை சுற்றி வருகிறது பன்னாட்டு விண்வெளி நிலையமான ISS. கிட்டத்தட்ட 26 வருடங்களாக விண்வெளி ஆராய்ச்சியில் முக்கிய பங்கு வகித்து வரும் இந்த மிகப்பெரும் செய்மதியை 2030 ஆமாண்டுடன் பூமியின் பசுபிக் சமுத்திரத்தில் பாதுகாப்பாக வீழ்த்தி அதன் செயற்பாட்டை நிறைவுக்குக் கொண்டு வரும் திட்டத்தில் நாசா உள்ளது.
இதற்காக எலொன் மஸ்க் இன் தனியார் விண்வெளி ஆய்வு நிறுவனமான Space X உடன் சுமார் $843 மில்லியன் டாலருக்கு நாசா ஒப்பந்தம் மேற்கொண்டு புதன்கிழமை அறிக்கை வெளியிட்டிருந்தது. சமீபத்தில் ISS விண்வெளி ஆய்வு நிலையத்தில் தங்கியிருந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விண்வெளி வீராங்கணை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் பேரி வில்மோர் என்ற விண்வெளி வீரர் ஆகிய இருவரும் பூமிக்குத் திரும்புவதில் சற்று சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே இவர்கள் இருவரும் போயிங்கின் Star liner என்ற விண் ஓடத்தில் ஜூன் 9 ஆம் திகதியும் பின்பு 26 ஆம் திகதியும் திரும்பவிருந்தனர். ஆனால் குறித்த விண்கலத்தில் ஏற்பட்ட பழுது காரணமாக இது சாத்தியமாகவில்லை.
இந்நிலையில் இந்திய விண்வெளி ஆய்வு நிலையாமான இஸ்ரோவைச் சேர்ந்த வானியலாளர் மயில்சாமி அண்ணாத்துரை கருத்துத் தெரிவிக்கும் போது ஸ்டார் லைனர் இல் பழுது சரிபார்க்கப் பட்டு அவர்கள் விரைவில் பூமிக்குத் திரும்புவர் என்றும் அதற்கான சாத்தியங்கள் உள்ளன என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
விண்வெளியில் எவ்வாறு வயது வித்தியாசம் வேறுபடுகின்றது? செயற்கை பயிரிடல் சாத்தியமா? பூமிக்கு அருகே யாரும் வேற்றுக் கிரகவாசிகளது விண் ஓடங்கள் வருகின்றதா? விண்வெளிப் பயணங்களை மனிதர்கள் மேற்கொள்ள அவர்களது உடல் சுகாதாரத்தை எவ்வாறு பராமரிக்க வேண்டும்? பூமியில் காலநிலை ஆய்வு உட்பட பல முக்கிய ஆய்வுகளுக்கு வழி வகுத்து வந்த ISS இதுவரை அமெரிக்கா மற்றும் ரஷ்யா ஆகிய இரு நாடுகளின் கட்டுப் பாட்டில் தான் பெரும்பாலும் இருந்து வந்தது. ஆனால் சர்வதேச விண்வெளி வீரர்கள் இந்த ஆய்வில் அவ்வப்போது பங்கேற்றதுடன் ISS இல் பல மாதக் கணக்கில் தங்கியிருந்தும் ஆய்வு மேற்கொண்டனர். பூமியிலுள்ள ஏனைய விண்வெளி நிலையங்களுடனும் தகவல் பரிமாற்றம் இடம்பெற்று வந்ததும் குறிப்பிடத்தக்கது.
சுமார் 4 டன்களுக்கும் அதிகமான எடையும், பாஸ்கெட் பால் மைதான அளவு பருமனும் கொண்ட ISS ஓடம் அதன் பணிக் காலம் முடிந்த பின்பு, ஒரு விண்வெளிக் குப்பையாக விடுவதோ (Space Debris) அல்லது இயல்பாகவே பூமியுடன் மோதச் செய்வதோ ஆபத்தான முடிவுகள் ஆகும். ஏனெனில் ISS பூமியில் விழும் போது அது காற்றுடனான உராய்வினால் முற்றாக எரியாது நிலப்பரப்பின் மேல் விழும் சாத்தியம் அதிகம் உள்ளது. இது மனிதர்களுக்கு ஆபத்தானது ஆகும். எனவே தான் 2030 ஆமாண்டு இதனை Space X நிறுவனத்தின் ஓடம் மூலம் உந்தப் பட்டு பசுபிக் சமுத்திரத்தில் வீழ்த்தப் படுவதற்கு வானியலாளர்களால் திட்டமிடப் பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.