சமீபத்தில் ஊடகங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் இவ்விடயம் உண்மையில் நாசாவின் விண்கற்கள் பற்றிய அவதான அறிக்கையன்றி ஆனால் நாம் மிகவும் ஜாக்கிரதையாக இருப்பதற்காக சித்தரிக்கப் பட்ட (Hypothetical) ஒர் விடயம் என நாசா விளக்கமளித்துள்ளது.
உண்மையில் நமது பூமியிலுள்ள நவீன வானியல் தொழிநுட்பங்கள் மூலம் பூமிக்கு அருகே வரக்கூடிய ஆபத்தான விண்கற்கள் குறித்து 90% வீதம் திருத்தமாக முன்கூட்டியே கணிப்பது இயலாது என்பதை வலியுறுத்தும் நாசா விஞ்ஞானிகள் 2038 இற்குள் பூமியில் ஒரு நாட்டையே சிதைக்கக் கூடிய விண்கல் தாக்குதலுக்கு நாம் உள்ளாகலாம் என்று மும்மொழிந்துள்ளது. ஆனால் இது குறித்த விழிப்புணர்வு பொது மக்களிடம் போதாமல் இருப்பதாகவும், இவ்வாறான அனர்த்தங்களைத் தவிர்க்க பூமியின் விண்வெளி ஆய்வு நிலையங்களின் கூட்டிணைவும் தகவல் பகிர்வும், மேம்பட்ட ஆராய்ச்சிகளும் மிக அவசியம் என்றும் நாசா வலியுறுத்தியுள்ளது.
14 வருடங்கள் முன்னதான இந்த எச்சரிக்கைப் படி இதுவரை கண்காணிக்கப் படாத குறித்த விண்கல் பூமியைத் தாக்க 72% வீதம் வாய்ப்பு இருப்பதாகத் தெரிவித்துள்ள நாசா இதை முன்கூட்டியே தவிர்ப்பது மிகக் கடினம் என்ற போதும் இத்தாக்குதலுக்குப் பின்னதான மீட்பு நடவடிக்கைகள் எவ்வாறு மேற்கொள்ளப் பட வேண்டும் என்பது குறித்தும் இப்போதே சிந்திப்பது அவசியம் என்றும் தெரிவித்துள்ளது. NEO எனப்படும் பூமிக்கு அருகே வரக்கூடிய பொருட்களைக் கண்காணிக்கும் நாசாவின் பிரிவு இப்போதிருந்தே இந்த விண்கல் போன்ற தாக்குதல்களை எதிர்கொள்ளும் சவால் மிக்க பணியை முனைப்புடன் செயற்படுத்தத் தொடங்கியிருப்பதாகவும் நாசா தெரிவித்துள்ளது.
இது தவிர FEMA எனப்படும் அமெரிக்காவின் அவசர பெடரல் முகாமைத்துவ அமைப்பு மற்றும் ஏனைய உலகளாவிய விண்வெளிப் பாதுகாப்பு அமைப்புக்களும் இந்த முன்கூட்டிய விண்கல் தாக்குதல் எச்சரிக்கை செயற்திட்டத்தில் இணைய அழைப்பு விடுக்கப் பட்டுள்ளது. இதேவேளை சில ஊடகங்களில் இந்த ஆபத்து சாதாரண சிறிய விண்கல்லாக அல்லாது பேரழிவை ஏற்படுத்தக் கூடிய வால்வெள்ளிகளில் ஒன்றாக (Asteroid) இருக்கலாம் என்றும் செய்தி வெளியிட்ட போதும், பூமியுடன் மோதக்கூடிய மிகப் பெரிய குறுங்கோளாக இது நிச்சயமாக கூறப்படவில்லை என நாசா விளக்கியுள்ளது.
மேலும் இந்த விண்கல் அல்லது வால்வெள்ளி மோதுகை குறித்து இவ்வளவு அவசரமாக ஒரு கருத்தியல் பிரகடனத்தை நாசா வெளியிட்டிருப்பதன் பின்னணியில் முழுக்க முழுக்க நமது பூமியைப் பாதுகாக்கும் செயற்திட்டமே (Planetary Defence System) உள்ளது என நாசா அழுத்தம் திருத்தமாகத் தெரிவித்துள்ளது. அண்மைக் காலத்தில் ஜேர்மனியில் விழுந்த ஒரு சிறிய விண்கல் புமியின் வளி மண்டலத்துக்குள் நுழைந்த பின்னர் துல்லியமாக அதன் இயக்கமும் விழும் இடமும் ஜேர்மனியின் வானியலாளர்களால் கணிக்கப் பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. நாசாவின் JPL எனப்படும் ஜெட் எஞ்சின் பரிசோதனைக் கூடத்தில் இருந்து செயற்படும் Sentry Impact Monitoring System என்ற பிரிவு பூமியில் மனித வரலாற்றில் கண்டுபிடிக்கப் பட்ட அனைத்து விண்கல் அல்லது வால்வெள்ளி மோதுகை சம்பவங்களின் புள்ளிவிபரங்கள் மற்றும் ஏனைய தொழிநுட்பங்களை அடிப்படையாகக் கொண்டு இனி வரக்கூடிய 100 வருடங்களுக்கு பூமியுடன் மோதக்கூடிய ஆபத்தான பொருட்கள் குறித்துத் தீவிரமாக ஆய்ந்து வருகின்றது.
இதுதவிர பூமிக்கு மேலே பல்வேறு சுற்றுப் பாதைகளில் வலம் வரும் செய்மதிகளின் உடைந்த பழைய பாகங்கள், அல்லது கைவிடப் பட்ட செய்மதிகள் போன்றவையும், கீழே விழும் போது வளி மண்டல உராய்வினால் முற்றாக எரிக்கப் படா விட்ட்டால் அல்லது கடலில் விழாது தரையில் விழுந்தால் அவையும், குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதும் கவனிக்கத் தக்கது.
நமது சூரிய குடும்பத்தில் அதற்கு வெளியே இருந்து குறிப்பிட்ட காலத்துக்கு ஒருதடவை வலம் வரக்கூடிய வால்வெள்ளிகள் பூமிக்கு அருகே பயணிக்கக் கூடிய சந்தர்ப்பங்களும், செவ்வாய்க் கிரகத்துக்கும், வியாழன் கிரகத்துக்கும் இடையே உள்ள விண்கல் பட்டை மற்றும் நெப்டியூன் கிரகத்துக்கு அப்பால் உள்ள கியூப்பர் பெல்ட் எனப்படும் விண்கற் தொகுதி போன்றவற்றில் இருந்து வரக்கூடிய விண்கற்கள் குறித்தும் உலகளாவிய விண்வெளி அமைப்புக்கள் ஆய்வில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
Source : NASA