பிரபஞ்சத்தில் அறிவார்ந்த உயிரினங்களான மனிதர்களாகிய நாம் வாழும் ஒரேயொரு அறியப் பட்ட கிரகமாக இதுவரை விளங்கி வரும் நமது பூமிக்கு முகவரி உண்டா? அவ்வாறு இருப்பின் எவ்வாறு அந்த முகவரியை நாம் ஒழுங்கு படுத்திக் கொள்ளலாம்? இது தொடர்பான சுவாரஷியமான தகவல் கீழே :
எமது பிரபஞ்சத்தில் காணப்படும் பல பில்லியன் கணக்கான அண்டங்களில் வேர்கோ சூப்பர் அண்டத் தொகுதியில் (Virgo Supercluster of Galaxies) எமது பூமி மற்றும் சூரிய குடும்பம் காணப்படும் பால்வெளி அண்டம் (Milky way Galaxy) அமைந்துள்ளது. சூப்பர் கிளஸ்டர் என்பது ஈர்ப்பு விசையால் பிணைத்து வைக்கப் பட்டுள்ள அண்டங்களின் தொகுதி ஆகும்.
இந்த வேர்கோ சூப்பர் கிளஸ்டரில் உள்ள Local Group எனப்படும் சிறு அண்டங்களின் கூட்டில் பால்வெளி அண்டம் அமைந்துள்ளது. இந்த லோக்கல் குரூப்பில் உள்ள 2 ஆவது பெரிய அண்டமான எமது பால்வெளி அண்டம் சுருள் வடிவ அண்டமாகும் (Spiral Galaxy). இந்த பால்வெளி அண்டத்தின் மத்தியில் இருந்து விளிம்பு நோக்கிய தூரத்தின் 2/3 மடங்கு தூரத்திலுள்ள ஒரு சுருள் விளிம்பில் (Spiral Arm) பூமி அமைந்திருக்கும் சூரிய குடும்பம் அமைந்துள்ளது.
சூரிய குடும்பத்தில் சூரியனைச் சுற்றி வரும் 8 கிரகங்களும், பல வால்வெள்ளிகள், விண்கற்கள் மற்றும் குள்ளக் கிரகங்கள் என்பவை உறுப்பினர்களாக அமைந்துள்ளன. இதில் சூரியனைச் சுற்றி வரும் 3 ஆவது நீல நிறக் கிரகம், பல கோடி உயிர்ப் பல்வகைமை கொண்ட எமது பூமி ஆகும்.
இப்போது சுருக்கமாக எமது பூமியின் முகவரியைக் கூறுவதானால் இவ்வாறு கூறலாம் -
கண்ணுக்குத் தெரியும் பிரபஞ்சம் (Observable Universe) - வேர்கோ சூப்பர் கிளஸ்டர் அண்டத் தொகுதி - லோக்கல் குரூப் அண்டங்கள் - பால்வெளி அண்டம் - பால்வெளி அண்டத்தின் மையத்தில் இருந்து 270 000 ஒளியாண்டு தூரத்தில் விளிம்பிலுள்ள சூரிய குடும்பம் - சூரியனில் இருந்து 3 ஆவது கிரகம் -பூமி!
நன்றி, தகவல் - Quora
- 4தமிழ்மீடியாவுக்காக நவன்