பௌதிக இயற்கையின் அடிப்படைக் கூறான அணுவைப் பற்றியும், அதன் உள்ளே இருக்கும் உலகம் குறித்தும் நவீன மனிதனது அறிவியல் தெளிவு என்னவென்பதை பௌதிகவியல் விதிகள், மற்றும் கோட்பாடுகள், தத்துவங்கள் மூலம் எமது வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் நீண்ட காலமாகவே எனக்குள்ளே இருந்து வருகிறது.
ஆனாலும் நமது 4தமிழ்மீடியா தளத்தில் இதுவரை நீங்கள் வாசிக்க நேரிட்ட அறிவியல் தொடர்கள் பெரும்பாலும் வானவியல் தொடர்பாகவே இருந்தன. (உதாரணம் - நட்சத்திரப் பயணங்கள்..., நாம் தனிமையில் இல்லை..)
இந்நிலையில் அணுக்கரு பற்றிய விஞ்ஞான ரீதியிலான புரிதல்களை சிக்கலான கணித சூத்திரங்களை இயன்ற வரை தவிர்த்து எளிமையாக வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டு இந்த 3 ஆவது அறிவியல் தொடர் எழுதப் படுகின்றது. இந்தத் தொடரில் அடிப்படைத் தகவல்களை அலசிய பின்பு, YouTube இல் பௌதிகவியல் தொடர்பான ஆங்கில சேனல்களில் வெளிவரும் புதுமையான தகவல்களையும் Copyrights உடன் கூடிய தமிம் மொழி மாற்றத்துடன் மீள் வீடியோவாக இணைத்து வெளியிடவும் திட்டமிட்டுள்ளோம்.
மேலும் இத்தொடரில் குவாண்டம் பௌதிகவியல் போன்ற அணுக்கரு தொடர்பான ஆழமான கோட்பாடுகளை இயன்றவரை இலகு நடையில் புரிந்து கொள்ளும் முயற்சியும் மேற்கொள்ளப் படவுள்ளது. இக்கட்டுரையை வாசிக்கும் வாசகர்கள் இதில் தவறான விதத்தில் கருத்துப் பகிர்வு பதியப் பட்டிருப்பதாக உணர்ந்தாலோ அல்லது விளக்கம் போதாமல் இருப்பதாக உணர்ந்தாலோ கீழே இருக்கும் கமெண்டு பாக்ஸில் அதனை உடனே தெரியப் படுத்துமாறும் வேண்டுகிறோம்.
இந்த முதலாவது அறிமுகக் கட்டுரையில் அணுக்கரு என்றால் என்ன? அதன் ஆங்கில சொல்லான Nucleus எவ்வாறு இரு அர்த்தங்களில் பொருள் படுகின்றது என்பதை முதலில் பார்ப்போம். நியூக்ளியஸ் (Nucleus) என்ற இந்த சொல் பொதுவாக உயிரியல் கல்வியில் (Biology) குரோமோசோம்களை (Chromosomes) உள்ளடக்கிய பெரும்பாலான கலங்களின் (Cells) உட்பகுதியாகப் பொருள் படுகின்றது.
ஆனால் எமது கட்டுரையில் பயன்படுத்தப் படவுள்ள Nucleus என்ற சொல் வேதியியல் அடிப்படையில், எந்தவொரு சடத்தினதும், (Matter) மேற்கொண்டு பிரிக்க முடியாத மிகச் சிறிய கூறான அணுவின் உள்ளே புரோட்டன்களையும், நியூட்ரோன்களையும் கொண்டு கிட்டத்தட்ட அதன் அனைத்து திணிவையும் (Mass) உள்ளடக்கும் விதத்தில் வடிவமைந்துள்ள அதன் மையப் பகுதியையே குறிக்கின்றது. இதனால் தான் இக்கட்டுரையின் தலைப்பில் நாம் Atomic Nucleus என்று குறிப்பிட்டுள்ளோம்.
மனிதர்களாகிய நாம் சூரியன், வானம், மரங்கள், பல்வேறு சத்தங்களை எழுப்பும் பூச்சிகள், உயரப் பறக்கும் பறவைகள், நாம் நீங்கள் என அனைவரும் மிக அற்புதமான பல்வகைமையுடன் படைக்கப் பட்டிருக்கும் உலகத்தில் வாழ்கின்றோம். ஆனாலும் எமது இந்த உலகுக்கு இன்னொரு விதமான அழகும் உள்ளது. அது இந்த கண்களால் பார்க்கப் படும் அனைத்து உருவங்களும் ஆக்கப் பட்டுள்ள கூறான சடத்தின் (Matter) அடிப்படைப் பொதுத் தன்மை (Unity) பற்றியது.
இந்த பொதுத் தன்மை நேரடி அனுபவம் போல் தோன்றலாம். ஆனால் அது அறிவியல் மொழியில் புரிந்து கொள்ளப் பட மனிதனுக்கு ஆயிரக் கணக்கான வருடங்களை எடுத்துக் கொண்டுள்ளது. முதன் முறையாக பண்டைய கிரேக்க விஞ்ஞானிகளான லெயுசிப்பஸ் மற்றும் டிமோக்கிரட்டீஸ் ஆகியோர் அணு பற்றிய தமது கருத்தை முன் வைத்தனர். தண்ணீரானது குளிராக உறைந்து பனிக்கட்டி ஆவதும் பின் அது வெப்பத்தின் போது ஆவியாகி வெளிப்படுவதும் இந்த நீராவி குளிர்வடைந்து மீண்டும் தண்ணீர் ஆவதும் இவர்களது கவனத்தை வெகுவாக ஈர்த்தது.
இந்த 3 நிலைகளிலும் தண்ணீரின் அடிப்படைக் கூறானது அது உறைந்து கட்டியானாலும், உருகி நீராவியானாலும் ஒரே கட்டமைப்பைத் தான் கொண்டிருக்க வேண்டும் என்றும் இதன் மூலம் அனைத்துப் பொருட்களுமே கண்ணுக்குத் தெரியாத பிரிக்க முடியாத அடிப்படை அலகுகளால் தான் ஆனவை என்ற முடிவுக்கும் இவர்கள் வந்தனர். ஆனால் இன்றைய நவீன உலகில் நமக்கு அணுக்களைக் கூடப் பிளக்க முடியும் என்றும் தெரியும். இது நமக்குத் தெரிய முன்பே ஆதி தமிழர் வாழ்வியல் நூலான திருக்குறள் பற்றிய விளக்கம் ( வெண்பா? )ஒன்றில் ஔவையார் 'அணுவைத் துளைத்து ஏழ்கடலைப் புகட்டி குறுகத் தறித்த குறல்' என்று கூறியிருப்பார்.
எமது பண்டைய தமிழர் வாழ்வியலில் இந்த அணு விஞ்ஞானம் எவ்வாறு கூறப் பட்டிருந்தது என்ற ஆய்வுக் கண்ணோட்டத்தைப் பின்னதாகப் பார்ப்போம். முதலில் சடத்தின் மிகச் சிறிய கூறான அணுவைப் பிளக்க அதி தீவிரமான ஒரு பௌதிக நிபந்தனை (உதாரணம் சூரியனுக்கு உள்ளே நிகழும் கருத்தாக்கம் மற்றும் அணுகுண்டு) தேவை ஆகும். ஆனால் இந்த பௌதிக நிபந்தனை ஒரு போதும் ஆய்வு கூடத்தில், இதுவரை அறியப் பட்ட எந்தவொரு இரசாயனத்தையும் இன்னொன்றுடன் சேர்ப்பதால் உண்டாகாது என்பதால் லெயுசிப்பஸ் மற்றும் டிமோக்கிரட்டீஸ் ஆகியோர் வந்த முடிவு தீர்க்கமானதே ஆகும்.
அணுக்கரு தொடர்பான கண்ணோட்டம் இவர்களது காலத்தில் இருந்து இன்று வரை எவ்வாறு மாற்றம் பெற்று வருகின்றது என்பது குறித்த தகவல்களை அடுத்த வாரம் கட்டுரையில் பார்ப்போம்..
நன்றி, தகவல் - A Trip Into The Heart Of Matter, கூகுள், விக்கிபீடியா
- 4தமிழ்மீடியாவுக்காக நவன்