free website hit counter

தேநீர் கச்சிதம்!

கலாச்சாரம்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

ஒரு கோப்பை தேநீரிருடன் மாலைப்பொழுதொன்றை 'மிஸ் இந்தியா' திரைப்படத்தை பார்த்துக்களித்தேன். 

கோப்பி VS தேநீர் போருக்கு சரியான போட்டியாக மிஸ் இந்தியா திரைக்கதை அமைந்திருக்கும். அமெரிக்கா வந்த சிலநாட்களுக்குள் இந்திய சுவையில் தேநீர் எங்குமே கிடைக்காமல் பரிதவிக்கும் கீர்த்தி சுரேஸ் போல்; சுவிஸ் சுற்றுலா சென்றிருந்த எனக்கு கண்டி தேயிலை சுவையில் கிடைக்காத தேநீருக்காக வருந்தினேன். தேயிலைத்தோட்டங்கள் நிறைந்த ஊரில் பிறந்ததினாலோ என்னமோ தேநீர் பிரியை ஆகிவிட்டேன். அடிக்கும் கோடை வெயிலிலும் முற்பகல் வேளையில் ஒரு கோப்பை தேநீர் அருந்தாவிடில் முக்கியமான தொன்றை பறிகொடுத்த மனநிலை நீடிக்கும். 

ஐரோப்பியர்கள் உணவு செரிமானத்திற்காக வெறும் தேநீர் அருந்துவதை கவனித்தேன்; அதுவும் தெரியாமல் சில மூலிகை கலந்த சுவைகளில் பருகும் சந்தர்ப்பத்தை கடப்பதற்குள் சிரமமாகிவிட்டது. சில நாடுகளில் முக்கியத்துவமாக கருதப்படும் தேநீரை ஒருநாளில் மூன்று தடவைக்கு மேல் அருந்துபவர்கள் பலர். பட்னி கிடக்கவேண்டிய நாளை உயிர்ப்புடன் நடாத்தும் இடத்திக் தேநீரும் உள்ளது. இருப்பினும் எதுவும் அளவுடன் ஆரோக்கியமாக எடுத்துக்கொண்டால் பலன்.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் கோப்பியை கொண்டாடுவதை போல ; ஆசிய நாடுகள் தேநீரை கொண்டாடுகிறது. இலங்கை, இந்தியா மட்டுமல்ல ஜப்பான் நாட்டில் தேநீருக்கு என்று ஒரு தனி உளவியல் சார்ந்த வரலாறே உள்ளது. அதற்கு முதல் சில தேநீர் சம்பவங்களை நினைவுபடுத்த விரும்புகிறேன்.

ஒருசமயம் சுகவீனம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கபட்டிருந்த தந்தைக்காக நானும் என் அண்ணனும் அங்கு காத்திருந்தோம். அடுத்தநாள்தான் மருத்துவமனையிலிருந்து வெளியாகவேண்டிய சூழல். இரவு வேளை நெருங்கிக்கொண்டிருந்தது. சற்றென்று அண்ணன் என்னை வெளியே அழைத்துச்சென்று அருகில் இருந்த கடைக்குள் நுழைந்தான். கடைக்காரரைத்தவிர கடையில் வேறு ஒருவருமே இல்லை. மங்கிய மஞ்சள் குமிழ் வெளிச்சம்; சுமாரான சுவர்கள் நடுவே; மரமேசையும் கதிரைகளும் எங்கள் வருகைக்காக காத்திருப்பது போல் காட்சி அளித்துக்கொண்டிருந்தது.

 கவனத்தை திசைதிருப்பும் வண்ணமாக எமக்கு முன் சுடச்சுட இஞ்சி கலந்த தேநீர் வைக்கப்பட்டது. அப்படியான ஒரு தருணத்தில்; அப்படியொரு இஞ்சித் தேநீரை வேறு எங்கேயும் சுவைத்ததில்லை.. அன்றிருந்த மனநிலையை மாற்றி அக்கணத்தை மட்டும் அனுபவிக்க அந்தத் தேநீர் தூண்டியது.  இடப்பெயர்வினால் 10 வருடங்களுக்கு முன் மலேசியாவில் இருந்த காலக்கட்டம் அது. இந்நாட்டிலும் தேநீருக்கு அருமையான சுவை உள்ளதா என முதன் முதலாக அதிசயத்து போனேன். 

அதேபோல் இந்தியப்பயணம் ஒன்றிலும் கிடைத்தது. தேநீரின் அற்புதத்தை இந்தியாவின் தமிழ்நாட்டில் சொல்லவே தேவையில்லை. சென்ற இடமெல்லாம் பருகிய தேநீர் தருவித்த சுகத்தை அளக்க இயலாது. எல்லாவற்றுக்கும் சேர்த்து இறுதியாக சுற்றுலா முடிந்து திரும்பும் ஓரிரு நாட்களில்; நண்பர் ஒருவர் வீட்டில் தங்கியிருந்த போது அவர்கள் தந்த மசாலா தேநீர் இன்னமும் மறக்கமுடியாதது. தேநீர் தருகிறேன் எனக் கூறிச்செல்வார். கனநேரத்தின் பின்னே வந்துசேரும்; ஆனால் பருகிய பின்னே புரியும் எவ்வளவு தூரம் மினக்கெட்டு எங்களுக்காக தயாரித்து அன்போடு அளிக்கிறார் என்று.  பெரிதும் பழக்கப்படாத வெளி உணவு, வெப்பநிலை; அதோடு நாட்டுக்கு திரும்பப்போகிறோமே எனும் மனவருத்ததையும் சமாளிக்க இந்த மசாலா தேநீர் உதவியது. 

இப்படி பல அழகிய தருணங்களை ஞாபகத்தில் வைத்திருக்கிறேன் என்றால் அதில் தேநீரின் பங்குதான் அதிகமாக இருக்கும். இது சிலருக்கு பிடித்த உணவு, சிலருக்கு கோப்பி அல்லது பானம் போன்று வகைப்படலாம். இதற்கு மன ரீதியான காரணமும் சொல்லப்படுகிறது.

ஜப்பான் கலாச்சாரத்தில் தேநீர் விருந்து ஒன்று கடைப்பிடிக்கப்படுகிறது. அங்கு தேநீர் விருந்து கொண்டாட்டத்தில் பலவகை காணப்படுகின்றபோதும் 'சென் நோ ரிக்யூ' என்பவர் ஜப்பானின் (1336 - 1573) காலக்கட்டத்தில் உருவாக்கிய 'வாபி-சா' என அழைக்கப்படும் தேநீர் விருந்து மிக எளிமையானது. இருவர் மட்டுமே கலந்துகொள்ளும் ஒரு அறை;  தரையில் தட்டாமி பாய்கள் விரிக்கப்பட்டிருக்கும்; தேநீர் குடுவை; அதை சூடாக்கிக்கொண்டிருக்கும் ஓர் அடுப்பு மற்றும் ஒரு மூலையில் தொங்கவிட்டப்பட்டிருக்கும் கவி வரிகள் அடங்கிய காகித சுருள்; இவை தவிர கவனச்சிதறல் ஏற்படுத்தக்கூடிய எந்த விடயமும் இருக்காது. இந்த விருந்தை அளிப்பவரும் சரி அழைக்கப்பட்டிருப்பவரும் சரி இதுபோன்று இதேபிரதியில் மற்றுமொரு சந்திப்பு நிகழாது என்பதை கருத்தில் கொண்டு அக்கணம் நிகழும் ஒவ்வொரு அம்சத்தையும் உண்மையாக கையாளுவதற்கு இவ்வாறு 'சென்' அமைத்திருப்பதாக கூறப்படுகிறது.

ஏனெனில் ஒவ்வொரு சந்திப்பும் முக்கியமானது; நாம் சந்திக்கும் ஒவ்வொரு தருணமும் தனித்துவமானது; இறந்தகாலத்திலிருந்து வெளிவந்து , எதிர்காலத்தினுள்ளும் சென்றுவிடாமல்; நிகழ்காலத்தை எப்படி கொண்டாடுவது; என இந்த தேநீர் விருந்துக்கு பின்னால் சொல்லப்படும் உளவியல் உண்மைகள் குறித்து விவரிக்கிறது இந்த புத்தகம்.

 ஜப்பான் உரஷினோ என்ற இடம் உலகிலேயே மிகச் சிறந்த தேயிலை பயிரிடப்படுகின்ற இடமாக கருதப்படுகிறது; அங்கு விளையும் ஜியோகுரோ எனும் தேயிலை; ஜப்பான் கியோட்டோ நகர் தேநீர் விடுதி ஒன்றில் விற்கப்படும் தேநீருக்கு பயன்படுத்தப்படுகிறது. அங்கு சென்ற இருவர் அந்த பிரபல்யமான தேநீரை சுவைத்த அக்கணத்தில் அவர்களை சுற்றியிருந்த சூழலிருந்து பலவித அழகிய உணர்வுகளை பெற்றுக்கொள்கின்றனர். உடனே அருகே தொங்கவிட்டிருந்த மரப்பலகை ஒன்றில் எழுதப்பட்டிருந்த வாசகத்தை வாசிக்கிறார்கள். அது ஜப்பானிய மொழியில் அக்கணத்தை உணர்த்துவதாக அமைகிறது. அப்போது அவர்களிடமிருந்து உருவானதுதான் 'இச்சிகோ இச்சியே' எனும் புத்தகத்திற்கான சிந்தனை. அதில் எழுதப்பட்டிருந்ததும் இதுவே.

ஜப்பானியர்கள் தங்களுக்குள் நிகழும் இதுபோன்ற அற்புத தருணங்களின் போது இந்த வாசகத்தை சொல்லிக்கொள்வார்களாம். அதன் பொருள் //நாம் இப்போது அனுபவித்துக்கொண்டிருக்கும் இக்கணம் மீண்டும் ஒருபோதும் இதுபோன்று நிகழாது என்பதாகும்// என இந்த புத்தகத்தை எழுதிய 'ஹெக்டர் கார்சியா' மற்றும் 'பிரான்செஸ்க் மிராயியஸ்' தெரிவிக்கின்றனர். இதன்பின்னே மலேசிய தேநீர் தருணம் முதல் - கிடைத்த சில தேநீர் தருணம் வரை நிகழ்காலத்தின் தொடர்பை உணரவைத்ததை புரிந்தேன்.

புத்தகத்தை வாசிக்கத்தொடங்கிய சில மணிநேரத்திற்குள்ளே இதைப்பற்றி எழுதிவிட வேண்டும் எனும் எண்ணம் உதித்தமையால் உடனே எழுதத்தொடங்கிவிட்டேன் ஒரு கோப்பை தேநீருடன்; ஏனெனில் இதுபோன்ற அழகிய சந்தர்ப்பம் கச்சிதமாக மீண்டும் அமையாதல்லவா!

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction